வடக்கின் பாடசாலைகளை 7.30ற்கு ஆரம்பிக்கும் நேரத்தினை வடக்கின் கல்வி அமைச்சர் அவசரமாக மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் என பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்தார்.
வடக்கு மாகாண சபையின் 2017ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் கல்வி அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தின்போதே மேற்கண்ட கோரிக்கையினை விடுத்து உரையாற்றினார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
வடக்கின் பாடசாலைகளை 2017ம் ஆண்டு முதல் 7.30ற்கு ஆரம்பிக்கும் நேரத்தினை வடக்கின் கல்வி அமைச்சர் அவசரமாக மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் . ஏனெனில் வன்னிப் பகுதிக்கு தினமும் நூற்றுக் கணக்கான ஆசிரியர் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்பவர்கள் அதிகாலையில் 4 மணிக்கு எழும்பி அவசரமாக பணிகளை செய்து பேருந்தினைப் பிடித்து பாடசாலைகளிற்குச் செல்லவே சில சந்தர்ப்பங்களில் 8 மணியை தாண்டுகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் இனி 7.30 என்றால் இவர்களின் நிலையென்ன. விடுதிகளில் தங்கி நிக்குமாறு மட்டும் நாம் கூறிவிட முடியாது அவர்களின் கணவன் அல்லது மனைவியின் தொழில் . பிள்ளைகளின் குடும்பத்தவரின் நிலையெனப் பல விடயங்கள் உண்டு . அனைத்தையும் கவனத்தில் கொள்வதே நல்லது.
யாழ். குடாநாட்டில் பணிபுரியும் ஆசிரியர்கள்கூட தமது பிள்ளைகளையும் ஏற்றிச் சென்று பாடசாலைகளில் இறக்கிய பின்பு தமது பணிக்குச் செல்வதே வழமை. இனி வரும் நேர மாற்றத்தின் மூலம் அவ்வாறு அவர்கள் பயணிக்க முடியாது வீட்டிற்குச் சென்று மீண்டும் பயணித்தே தமது அலுவலகம் செல்ல வேண்டும். இதன் மூலம் தேவையற்ற பயணமும் விபத்துக்கான சந்தர்ப்பத்தினையும் உண்டுபண்ணுகிறது.
கொழும்பு உள்ளிட்ட ஏனைய இடங்களில் பாடசாலைகள் 7.30ற்கே ஆரம்பிக்கின்றமைக்காக இங்கும் அவ்வாறுதான் இடம்பெறவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அது மட்டும் அன்றி 8 மணிக்கு ஆரம்பமாகும் பாடசாலையை 7.30ற்கு ஆரம்பிப்பதான முடிவினை மேற்கொண்டது. கல்வி அமைச்சு மட்டுமே. ஆனால் மக்கள் என்ன கருதுகின்றனர் அந்த முடிவினை வட மாகாண சபையே மேற்கொண்டதாக. உண்மையில் இந்த முடிவு எட்டப்படும் வரையில் சபைக்குத் தெரியாது.
எனவே கல்வி அமைச்சர் 7.30ற்கு பாடசாலைகள் ஆரம்பிக்கும் தீர்மானத்தினை மீளாய்விற்கு உட்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.