பொதுத் தேர்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு மீற்றர் இடைவெளியை பேணி 200க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டு கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய பாடசாலைகளில் சகல மாணவர்களுக்கும் இன்று முதல் கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதேநேரம் 200க்கும் அதிக எண்ணிக்கையில் மாணவர் தொகையை கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவில் திங்கட்கிழமைகளில் முதலாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமைகளில் இரண்டாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்கள் மாத்திரம் சமூகமளிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதேநேரம் புதன்கிழமைகளில் மூன்றாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்களை மாத்திரம் பாடசாலைக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 4, 5 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தரம் ஒன்று இரண்டு மற்றும் மூன்றில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறும்.
இதேவேளை, 200க்கும் அதிக மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளின் சிரேஷ்ட பிரிவு மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பதற்கும் விசேட முறைமையை கல்வி அமைச்து அறிவித்துள்ளது.
இதற்கமைய திங்கட்கிழமைகளில் 6,10,11,12 மற்றும் 13ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமைகளில் 7,10,11,12 மற்றும் 13 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.
அதேநேரம், புதன்கிழமைகளில் 8,10,11,12 மற்றும் 13ஆம் தரங்களில் பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலை சமூகமளிக்க முடியும் என்றும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 9 முதல் 13 வரையான தரங்களில் கல்வி கற்கும் மாணவர்களை பாடசாலை மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.