பாடசாலை அனுமதிக்கான கட்டணத்தை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஊடாக நன்கொடையாக வழங்குமாறு வற்புறுத்தினால், இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
தரம் ஒன்று மற்றும் தரம் ஆறுக்கான அனுமதிகள் பாடசாலைகளில் தற்போது வழங்கப்படுகின்றன. இந்த அனுமதிக்காக பாடசாலைகள், அனுமதிக் கட்டணம் எதனையும் பெறக்கூடாது என்று கல்வி அமைச்சால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் யாழ்.மாவட்டத்தில் பல பிரபல பாடசாலைகள் உட்பட கிராமப்புற பாடசாலைகள் பலவும் பாடசாலை அனுமதிக்காக விண்ணப்பித்த பெற்றோர்களை அழைத்து, பாடசாலை அபிவிருத்திக்கு நன்கொடையாக நிதி வழங்குமாறு கேட்கின்றன.
நிதி வழங்காத பட்சத்தில் தமது பிள்ளைகளின் அனுமதி மறுக்கப்படும் என்ற அச்சத்தால் பெரும்பாலான பெற்றோர் பணத்தைச் செலுத்துகின்றனர். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது வெளிப்படையாகத் தெரிந்தும், கல்வித் திணைக்களம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றும் பெற்றோரால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
எனவே, இது தொடர்பில் பெற்றோர் மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியுமா என்று பிராந்திய இணைப்பாளரிடம் கேட்டபோது:
பெற்றோர்கள் எம்மிடம் தாராளமாக முறைப்பாடு செய்யலாம். பெற்றோர் அவர்கள் கோரும் கட்டணத்தைச் செலுத்துவதற்கு முன்பதாகவே எம்மிடம் முறைப்பாடுகள் செய்தால் நல்லது.என்றார்.