பாடசாலைகளில் நடைபெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்கவும்

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்தபோது அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லையென பாடசாலையின் அதிபர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தற்போது பாடசாலைகளில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து விளக்கமளிக்கும்போதே யாழ்.அரச அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.

பாடசாலைகளில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் பிள்ளைகள் தெரிவிக்கும்போது அதனை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்ட யாழ் அரச அதிபர் குற்றச்செயல்கள் மூடி மறைக்கப்படுவதால் குற்றவாளிகளே பாதுகாக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, இவ்வாறான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை இவ்வாறான சம்பவங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தகவல் அறிந்தவர்கள் இரகசியமான முறையில் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்றும் அவை உரிய முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும் யாழ்.அரச மேலும் தெரிவித்தார்.

Related Posts