யாழ். வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலைகளில் தனியார் கண் பரிசோதனையென்ற பெயரில் மாணவர்களிடம் பெரும் தொகைப் பணத்தை அபகரிப்பதில் ஒரு தனியார் கண்ணாடி நிறுவனம் ஈடுபட்டுவருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பாடசாலை மாணவர்களுக்கு கண்பரிசோதனையை இலவசமாக மேற்கொள்வதாகக் கூறி பாடசாலைகளுக்குள் பிரவேசிக்கும் குறித்த நிறவனம் மாணவர்களின் கண்களை பரிசோதனை செய்துவிட்டு கண்ணாடி போட வேண்டும் என கூறுகின்றனர்.
அதனை அடுத்து குறிப்பிட்ட தொகையை கொண்டுவந்து முதலில் கட்டுங்கள் என்று கூறி பணத்தை பெற்றுச் செல்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் விசனமடைந்துள்ளனர்.
கடந்தாண்டும் வெளிமாவட்டத்தில் இருந்து வந்த குறிப்பிட்ட நிறவனம் அரச திணைக்களங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் பணிமனைகளுக்குச் சென்று இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு பெரும் தொகைப் பணத்தை பெற்றுக் கொண்டதுடன் தரமற்ற கண்ணாடிகளை வழங்கிச் சென்றதாகவும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றார்கள்.
ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டதை தெரிந்த அதிபர்கள் பாடசாலைக்குள் அனுமதிக்காத போதிலும் பின்தங்கிய இடங்களில் உள்ள அதிபர்கள் நிலைமை தெரியாது அனுமதித்து சிக்கலில் உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.