யாழ் மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பாடசாலைகளிற்கு சமீபமாக ஐஸ்கிறீம், வெற்றிலை போன்றவற்றை விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்கிறீம், வெற்றிலை போன்றவற்றை விற்பனை செய்யும் சாக்கில், பான் பராக் மற்றும் போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது அம்பலத்திற்கு வந்ததையடுத்து இந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக யாழ்.தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகியவற்றுக்கு பெண் பிள்ளைகள் சென்றுவரக் கூடிய சுதந்திர சூழலை உருவாக்கும் முகமாக அவ்வாறான இடங்களுக்கு அருகே சிறிய படிக்கட்டுக்கள், சுவர்களில் கூட்டமாக இருந்த வண்ணம் தொந்தரவு செய்யும் இளைஞர்களை கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சிறுவர் மற்றும் பெண்களுக்கு அச்சுறுத்தல் அற்ற சூழலை உருவாக்குதல் மற்றும் போதைப் பொருள் தடுப்பு ஆகியவற்றை இலக்காக கொண்டு இந்த ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர்கள் மூவரின் கீழ் விசேட பொலிஸ் குழுக்கள் மூன்று அமைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளதாகவும் கூறினார்.
இதனடிப்படையில், யாழ்.பொலிஸ் நிலைய அதிகாரப் பகுதியில் கல்வி நிலையங்கள் மற்றும் பாடசாலைகள் இருக்கும் பகுதிகளில் பொலிஸார் சிவில் மற்றும் சீருடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவது குறித்து பல்வேறு தரப்பினரும் முறைப்பாடுகளை செய்து வந்த நிலையிலேயே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட பிரதான பொலிஸ் பரிசோதகர் உதய குமார வுட்லர் தனது பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கீழ் இது தொடர்பில் விஷேட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளார்.
அதன்படி பாடசாலை மணவர்களுக்கு ஐஸ்கிறீம் ,வெற்றிலை விற்பனை செய்யும் தோரணையில் பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வது குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் யாழ்.பாடசாலைகளில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக நடத்தி வந்த விஷேட விழிப்புணர்வு கருத்தரங்குகளை அடுத்தே அது தொடர்பில் தகவல் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாதைகளின் ஒரு சில இடங்களில் இருந்த வண்ணம் பெண்களை தொந்தரவு செய்து வந்த இளைஞர்கள் சிலரை பொலிஸார் கைது செய்து, பெற்றோரை அழைத்து எச்சரித்த பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
தமக்கு எதிரான நிலைமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது? எப்படி அதனை எதிர்கொள்வது? போன்ற விடயங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய குமார வுட்லரினால் பிரத்தியேகமாக ஒவ்வொரு பாடசாலைக்கும் சென்று மாணவர்களை சந்தித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.