திரைப்பட பின்னணி பாடகர், கே.ஜே.ஜேசுதாஸ், இந்து மதத்துக்கு மாறியதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, ‘டுவிட்டர்’ சமூக தளத்தில் வெளியிட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ், தமிழ் உட்பட, 14 இந்திய மொழிகளில், 45 ஆயிரம் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். ஏழு முறை தேசிய விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் உள்ளிட்ட விருதுகளையும் வென்றுள்ளார். கிறிஸ்தவரான ஜேசுதாஸ், இந்து கடவுள்கள் குறித்து பல்வேறு பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். இருப்பினும், அவர் இந்து மதத்தைச் சேராதவர் என்பதால், கேரளாவில் உள்ள பிரபல குருவாயூர் கோவிலுக்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தன், 76வது பிறந்த நாளையொட்டி, கர்நாடக மாநிலம் மங்களூருக்கு அருகில் உள்ள கொல்லுார் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார் ஜேசுதாஸ். அதைத் தொடர்ந்து, அவர் இந்து மதத்துக்கு மாறியதாக செய்திகள் வெளியாகின.
‘ஜேசுதாஸ், குடும்பத்தாருடன், தன் மூதாதையர்களின் மதமான இந்து மதத்துக்கு திரும்பியுள்ளார்; அவரை வரவேற்கிறேன்’ என, சுப்பிரமணியன் சாமி டுவிட்டரில் செய்தி வெளியிட்டார்; இது, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்த செய்தியை, ஜேசுதாசின் மனைவி பிரபா மறுத்துள்ளார்.