பாக். தூதர்- பிரிவினைவாதிகள் சந்திப்பு; பாக்.- இந்திய பேச்சு ரத்து

இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் புது தில்லியில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை சந்தித்ததை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறுவதாக இருந்த வெளியுறவுச் செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை இந்தியா ரத்துச் செய்துள்ளது.

indo_pak_talks

பாகிஸ்தான் தூதரின் இந்தச் சந்திப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இது ஒரு குறுக்கீட்டை ஏற்படுத்தியுள்ளது என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருத்தின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியாவுக்கான பாகிஸ்தானிய தூதர் அப்துல் பசித்திடம் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் தெரிவித்துள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்க்கு அழைப்பு விடுத்து இந்தியா முன்னெடுத்த இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர ஈடுபாட்டை, பாகிஸ்தான் தூதரின் தற்போதைய நடவடிக்கை சீர்குலைத்துள்ளது என்றும் வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் பாகிஸ்தானிய தூதரிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இரு நாட்டு வெளியுறவுச் செயலாளர்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி அன்று பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது.

தற்போதைய சூழ்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் இஸ்லாமாபாத் செல்வதால் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சையத் அக்பருத்தின், பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் பாகிஸ்தான் தூதரகம் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பல முறை பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்துள்ளது. எனினும் வெளியுறவுச் செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடக்கவிருக்கும் சமயத்தில் நடந்திருக்கும் இந்த சந்திப்பு ஆளும் பாரதிய ஜனதா கட்சியிடமிருந்தும் காங்கிரஸ் கட்சியிடமிருந்தும் கடும் எதிர்ப்புகளை எழுப்பியுள்ளது.

கடந்த சில தினங்களாக இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்தும் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts