20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை வெளியேற்றி ஆஸ்திரேலியா அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், சூப்பர்–10 சுற்று ‘கிளைமாக்ஸ்’ கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதில் மொகாலியில் நேற்று மாலை நடந்த சூப்பர்–10 சுற்றின் 14–வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் (குரூப்2 பிரிவு) மோதின.
ஆஸ்திரேலிய அணியில் இரு மாற்றமாக மிட்செல் மார்ஷ், ஜான் ஹேஸ்டிங்ஸ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஆரோன் பிஞ்ச், ஹேசில்வுட் இடம் பிடித்தனர். பாகிஸ்தான் அணியில் முகமது இர்பானுக்கு பதிலாக வஹாப் ரியாஸ் சேர்க்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி உஸ்மான் கவாஜாவும், ஆரோன் பிஞ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களத்திற்குள் அடியெடுத்து வைத்தனர். தனது சொந்த நாட்டு அணியை முதல்முறையாக எதிர்த்து ஆடிய உஸ்மான் கவாஜா (பாகிஸ்தானில் பிறந்தவர்) ஆக்ரோஷமாக பேட்டை சுழட்டினார். ஆனால் 4–வது ஓவருக்குள்ளே அடங்கிப் போனார். வஹாப் ரியாசின் பந்து வீச்சில் சற்று விலகி விளாச முயற்சித்த போது கவாஜா (21 ரன், 16 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கிளீன் போல்டு ஆனார்.
அடுத்து வந்த டேவிட் வார்னருக்கு (9 ரன்), மணிக்கு 148.1 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய வஹாப் ரியாசின் பந்தில் ஸ்டம்பு பிடுங்கியது. ஆரோன் பிஞ்சும் (15 ரன்) தாக்குப்பிடிக்க முடியவில்லை. முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 77 ரன்களுடன் கொஞ்சம் தடுமாறியது.
இந்த சூழலில் கேப்டன் ஸ்டீவன் சுமித்துடன், மேக்ஸ்வெல் கைகோர்த்தார். அணியின் ஸ்கோரை துரிதமாக உயர்த்திய மேக்ஸ்வெல் தனது பங்குக்கு 30 ரன்கள் (18 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து கேட்ச் ஆனார். அடுத்து இந்த தொடருடன் ஓய்வு பெற உள்ள ஆல்–ரவுண்டர் ஷேன் வாட்சன் ஆட வந்தார். வஹாப் ரியாஸ், முகமது அமிர், முகமது சமி ஆகிய வேக சூறாவளிகளின் பந்து வீச்சை வாட்சன் நொறுக்கியெடுத்தார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது.
முகமது அமிரின் ஓவரில் மட்டும் 2 சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். மறுமுனையில் 2–வது அரைசதத்தை கடந்த கேப்டன் ஸ்டீவன் சுமித்தும் பக்குவமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வலு சேர்த்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 20 ஓவர் உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவின் 2–வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஸ்டீவன் சுமித் 61 ரன்களுடனும் (43 பந்து, 7 பவுண்டரி), ஷேன் வாட்சன் 44 ரன்களுடனும் (21 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி 5–வது விக்கெட்டுக்கு 38 பந்தில் 74 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் வீரர்கள் ஓரளவு அதிரடி காட்டிய போதிலும், இலக்கை அடைவதற்கான வேகத்தை பார்க்க முடியவில்லை. ஷர்ஜீல் கான் 30 ரன்களிலும் (19 பந்து, 6 பவுண்டரி), காலித் லத்திப் 46 ரன்களிலும் (41 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), உமர் அக்மல் 32 ரன்களிலும் ( 20 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பினர். எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் அப்ரிடி 14 ரன்னில் (7 பந்து, 2 சிக்சர்) ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட போது, அதில் 8 ரன்களே எடுத்தது. சோயிப் மாலிக் (40 ரன், 20 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி வரை போரடியும் பலன் இல்லை. 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கு 172 ரன்களே எடுத்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றியை ருசித்தது. 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அமர்க்களப்படுத்திய ஜேம்ஸ் பவுல்க்னெர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா தனது கடைசி லீக்கில் இந்திய அணியுடன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மோதுகிறது. இதில் வெற்றி பெறும் அணி குரூப்–2 பிரிவில் நியூசிலாந்துடன் சேர்ந்து 2–வது அணியாக அரைஇறுதிக்குள் நுழையும்.
அதே சமயம் தோல்வியை தழுவிய பாகிஸ்தானின் அரைஇறுதி கனவு கலைந்தது. 4–வது ஆட்டத்தில் விளையாடிய பாகிஸ்தான் 3 தோல்வி, ஒரு வெற்றி என்று 2 புள்ளியுடன் வெளியேறியது. முதல் 4 உலக கோப்பை போட்டிகளில் ( 2007–ம் ஆண்டு 2–வது இடம், 2009–ம் ஆண்டு சாம்பியன், 2010, 2012–ம் ஆண்டுகளில் அரைஇறுதி) குறைந்தது அரைஇறுதிக்கு முன்னேறி இருந்த பாகிஸ்தான் கடந்த உலக கோப்பையில் சூப்பர்–10 சுற்றுடன் நடையை கட்டியது. இந்த உலக கோப்பையிலும் அதே சோகத்துடன் மூட்டையை கட்டுகிறது.