20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியுடன் அரைஇறுதிக்கு முன்னேறியது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், சூப்பர்-10 சுற்றில் நேற்றிரவு அரங்கேறிய 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) பலப்பரீட்சை நடத்தின. நியூசிலாந்து அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் டிம் சவுதி, டிரென்ட் பவுல்டுக்கு மறுபடியும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. பாகிஸ்தான் அணியில் காயம் காரணமாக முகமது ஹபீஸ், வஹாப் ரியாஸ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக காலித் லத்திப், இமாத் வாசிம் இடம் பிடித்தனர்.
டாஸ் ஜெயித்த நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. இதன்படி கேப்டன் கனே வில்லியம்சனும், மார்ட்டின் கப்திலும் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். கப்தில் அதிரடி வேடிக்கை காட்டினார். முகமது அமிரின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்திய கப்தில், அவ்வப்போது சிக்சர்களையும் பறக்க விட்டார். ‘பவர்-பிளை’யான முதல் 6 ஓவர்களில் நியூசிலாந்து 55 ரன்களை திரட்டியது.
அணியின் ஸ்கோர் 62 ரன்களை எட்டிய போது வில்லியம்சன் 17 ரன்களில் (21 பந்து) கேட்ச் ஆனார். 2-வது விக்கெட்டுக்கு வந்த காலின் முன்ரோ (7 ரன்) வந்த வேகத்தில் நடையை கட்டினாலும், அடுத்து வந்த வீரர்கள் கணிசமான பங்களிப்பை அளித்து, ரன் விகிதத்தை சரிய விடாமல் பார்த்துக் கொண்டனர். 10-வது அரைசதத்தை கடந்த கப்தில் 80 ரன்களில் (48 பந்து, 10 பவுண்டரி, 3 சிக்சர்) கிளீன் போல்டு ஆனார். கோரி ஆண்டர்சன் தனது பங்குக்கு 21 ரன்களும் (14 பந்து, 3 பவுண்டரி), ராஸ் டெய்லர் 36 ரன்களும் (23 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர், நாட்-அவுட்), லுக் ரோஞ்ச் 11 ரன்களும் எடுத்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் முகமது சமி, அப்ரிடி தலா 2 விக்கெட்டுகளும், முகமது இர்பான் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் 181 ரன்கள் இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷர்ஜீல்கானும், அகமது ஷேசாத்தும் வலுவான அஸ்திரவாரம் அமைத்து கொடுத்தனர். ‘பவர்-பிளை’யான முதல் 6 ஓவர்களில் மட்டும் 66 ரன்களை நொறுக்கினர். உலக கோப்பையில் பவர்-பிளையில் பாகிஸ்தானின் அதிகபட்சம் இது தான்.
ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் பாகிஸ்தானின் ரன்வேகம் தடாலடியாக தடம் புரண்டது. ஷர்ஜீல்கான் 47 ரன்களிலும் (25 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), அகமது ஷேசாத் 30 ரன்களிலும் (32 பந்து, 3 பவுண்டரி) கேட்ச் ஆனார்கள். மிடில் வரிசையில் எதிர்பார்க்கப்பட்ட உமர் அக்மல் (24 ரன், 26 பந்து) கேப்டன் அப்ரிடி (19 ரன்) இருவரும் பெரிய அளவில் சோபிக்காததால், பாகிஸ்தானின் தோல்வியை தவிர்க்க முடியாமல் போய் விட்டது. 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றியை சுவைத்தது.
நியூசிலாந்து அணிக்கு இது ‘ஹாட்ரிக்’ வெற்றியாகும். ஏற்கனவே பலம் வாய்ந்த இந்தியா, ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் 3 வெற்றிகளுடன் குரூப்2 பிரிவில் இருந்து முதல் அணியாக நியூசிலாந்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
3-வது ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தானுக்கு இது 2-வது தோல்வியாகும். இதனால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய சிதைந்து போய் விட்டது என்றே சொல்லலாம். பாகிஸ்தான் அணி கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, அதன் பிறகு மற்ற அணிகளின் முடிவுகளும் சாதமாக அமைந்து ஏதாவது மாயாஜாலம் நிகழ்ந்தால் மட்டுமே பாகிஸ்தான் அரைஇறுதி வாய்ப்பு பற்றி நினைக்க முடியும்.