பாகிஸ்தானைவிட இந்திய அணி வலுவானது: கபில் தேவ்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று தனது பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதுவதால், இந்த போட்டியை இருநாட்டு ரசிகர்கள் மட்டும் அல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் போட்டி குறித்து ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு கபில் தேவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“பாகிஸ்தான் தரமான பந்து வீச்சை கொண்ட போதிலும் இந்திய அணி பாகிஸ்தானை விட பலமடங்கு வலுவானதாக உள்ளது. 1980 களில் பாகிஸ்தான் சிறந்த அணியாக இருந்தது. ஆனால், கடந்த 15 ஆண்டுகளில் இந்தியா அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தரமிக்க அணியாக உள்ளது.

இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை கவனமுடன் கையாள வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக 160 அல்லது 170 ரன்கள் தேவை என்பதில்லை. 130 ரன்களே போதுமானது. அப்ரிடி அபாயகரமான வீரர். தனது திறமைக்கு அவர் நியாயம் செய்தால், அவர் ஒருவராலே ஆட்டத்தை திசை திருப்ப முடியும். ஆனால், இது அவரையும் அவரது தன்னம்பிக்கையையும் சார்ந்தது” என்றார்.

Related Posts