பாகிஸ்தானுக்காக உளவுபார்த்ததாக இலங்கையர் சென்னையில் கைது

சென்னையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குள் சென்று உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும் அருண் செல்வராஜன் என்ற நபரை தேசிய பாதுகாப்பு முகமை கைதுசெய்துள்ளது.

arun_selvarajan

இலங்கையைச் சேர்ந்தவரான அருண் செல்வராஜன் புதன் இரவு கைதுசெய்யப்பட்டார். வியாழனன்று பூந்தமல்லியிலிருக்கும் பொடா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவரை செப்டம்பர் 25ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நிகழ்ச்சிகளை நடத்தித் தரும் நிறுவனம் ஒன்றை அருண் செல்வராஜன் நடத்திவந்தார். நிகழ்ச்சிகளை நடத்துவது என்ற போர்வையில் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அவர் பார்வையிட்டதாக தேசிய பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

அவரிடமிருந்து இலங்கை, இந்தியா ஆகிய இரு நாடுகளின் கடவுச்சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.அருண் செல்வராஜன் மீது இலங்கையில் வழக்குகள் இருப்பதாகவும் அவர் தேடப்படும் குற்றவாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இருக்கும் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரிக்காக இந்தியாவிலிருந்து உளவு பார்த்தாக 2012ஆம் ஆண்டில் தமீம் அன்சாரி திருச்சியில் கைதுசெய்யப்பட்டார். அதே விவகாரத்தில் ஜாகிர் ஹுசைன் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை மண்ணடியில் கைதுசெய்யப்பட்டார்.

அந்த விவகாரம் தொடர்பாகவே தற்போது அருண் செல்வராஜனும் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்டவரிடமிருந்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இவற்றை இணையத்தின் மூலம் தனக்கு மேலிருப்பவர்களுக்கு அவர் வழங்கிவந்ததாகவும் தேசியப் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

Related Posts