பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான தேசிய கொள்கை தொடர்பில் ஆராய்ந்து, அதன் பின்னர் பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதாகவும் அதற்கு ஒரு மாதகால அவகாசம் தேவையென்றும் போக்குவரத்து அமைச்சினால்
நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழு முன்வைத்த கோரிக்கைக்கு, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கமைய, பஸ் கட்டணத்தை 15 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டுமென, தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினால் கோரிக்கையொன்று ஏற்கெனவே முன்வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால், 3.2 சதவீத பஸ் கட்டண அதிகரிப்பே மேற்கொள்ளப்பட முடியும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது கருத்துத் தெரிவித்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, ‘ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள 3.2 சதவீத கட்டண அதிகரிப்பானது, இன்றைய நிலைமைக்கு ஏற்றதல்ல’ என்றார்.
‘இந்நிலையில், மேற்படி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவினால், ஒரு மாத கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. அதற்கு நாம் இணங்கியுள்ளோம். எதிர்வரும் நாட்களில், இவ்விடயம் குறித்து, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடன் கலந்துரையாடுவோம்’ என்றும் அவர் மேலும் கூறினார்.
சாதாரணமாக, வருடத்தின் ஜூலை மாதக் காலப்பகுதியிலேயே, பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படுவது வழமை என்பது குறிப்பிடத்தக்கது.