பஸ் கட்டணத்தை கூட்டி அறவிட முடிவு

தமிழ்-சிங்கள புத்தாண்டு சேவையில் 3,000 பஸ்களை ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாகவும் அந்த பஸ்கள் யாவும், 8ஆம் திகதிமுதல் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் இலங்கை போக்குவரத்து சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

25ஆம் திகதி வரையிலும் ஈடுபடுத்தப்படும் இந்த விசேட பஸ் சேவையின் போது, பயணிகளிடமிருந்து அறவிடும் பஸ் கட்டணத்தை ஒன்றரை மடங்காக அதிகரித்து அறவிடுவதற்கு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

இந்த விசேட சேவையில் ஈடுபடும் பஸ்கள், ஒருவழிப்பயணத்தை மட்டுமே மேற்கொள்வதனால், கட்டணத்த ஒன்றரை மடங்காக அதிகரிப்பதற்குத் தீர்மானித்ததாக அவ்வாணைக்குழு அறிவித்துள்ளது.

விசேட சேவையில் ஈடுபடும் பஸ்கள், காலை 5 மணிக்கு புறப்படும் என்றும் 24 மணிநேரமும் சேவையில் ஈடுபடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பஸ்களில் உள்ள ஆசனங்கள், பயணிகளால் நிரம்பியவுடன் பஸ்கள் புறப்பட்டுவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சேவை ஆணைக்குழுவில் பதியப்பட்டுள்ள சாதாரண பஸ்களில், கூடுதலான கட்டணங்கள் அறவிடப்படுமாயின் அவ்வாறான பஸ்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதலான கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் 1955 அல்லது 0112 333 222 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு அறிவிக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts