Ad Widget

பஸ்கள் போட்டிபோட்டு ஓடுவதற்கு யாழ்ப்பாணச் சாலை முகாமையாளரே காரணம்

இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் தனியார் பஸ்களுடன் போட்டிபோட்டு ஓடுவதற்கு யாழ்ப்பாணச் சாலை முகாமையாளரே காரணம். தனியார் பஸ்ஸை முந்திச் செல்லாவிட்டால் சாரதி மற்றும் நடத்துநருக்கு எதிராக தண்டப்பணத்தை யாழ்.சாலை முகாமையாளர் அறவிடுகின்றார் என ஸ்ரீங்கா சுதந்திர போக்குவரத்துச் ஊழியர் சங்கம், தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்த் தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் என்பன தெரிவித்தன.

இது தொடர்பில் அந்தச் சங்கங்கள் மேலும் கூறியதாவது,

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் யாழ். சாலை முகாமையாளரால் ஊழியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதால், ஊழியவர்கள் உள ரீதியில் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஊழியர்களை குறி வைத்து குற்றவாளிகள் ஆக்கும் நோக்குடன் குற்றப்பத்திரம் தயாரித்தல், தண்டப்பணம் அறவிடுதல், இடைநிறுத்தல் செய்தல், இடமாற்றம் செய்தல், தண்டப்பணம் பெற்று மீட்டல் பயிற்சி வழங்குதல், வேலை நீக்கம் செய்ய எத்தனித்தல், மாதாந்த கலந்துரையாடல்களை தொழிற்சங்கங்களுடன் ஏற்படுத்தாமல் எதேச்சதிகாரமாக தன்னிச்சையான முடிவுகளை செயற்படுத்தல் ஆகிய செயற்பாடுகளால் ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் பஸ்களை முந்திச் செல்லத்தவறின் அந்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநருக்கு எதிராக தனியார் பஸ்ஸூக்கு ஆதரவாக செயற்பட்டார் என குற்றப்பத்திரம் போட்டு, சம்பளத்தில் தண்டப்பணம் அறவிடப்படுகின்றது. மேலதிகமாக தண்டப்பணம் கட்டி மீட்டல் பயிற்சி பெற கட்டாயப்படுத்துகின்றார். இவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகளால் தனியார் பஸ்ஸூடன் போட்டிபோட்டு ஓடவேண்டியுள்ளது.

சாலை முகாமையாளரின் அநீதிகளுக்கு உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளார்கள். எவரும் நடவடிக்கை எடுக்காததால், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தொழில் திணைக்களம், மனித உரிமை ஆணைக்குழு, நீதிமன்றம் போன்றவற்றை நாடவேண்டியுள்ளது. அண்மைக்காலமாக வடமாகாண தொழில் திணைக்களம் எமது பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டவில்லை.சாலை முகாமையாளரின் செயற்பாடுகளைக் கண்டித்து, தொழிற்சங்க சட்டவிதிகளுக்கு அமைவாக தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தன.

யாழ்ப்பாணச் சாலை முகாமையாளராக எஸ்.குலபாலச்செல்வம் கடமையாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts