Ad Widget

பஸிலுக்கு சி.வி.கே.சிவஞானம் கடிதம்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தி வரும் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக அபிவிருத்திச் செயற்றிட்டங்களை அமுல்படுத்தல் எனும் திட்டத்துக்காக விதித்துரைக்கப்பட்ட கொள்கைகளும், நடைமுறைகளும் வெளிப்படையாகவே மீறப்படுகின்றன என்பதை வலியுறுத்தி, வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

CVK-Sivaganam

நேற்று செவ்வாய்க்கிழமை (26) அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘வடமாகாண சபையின் கடந்த 21ஆம் திகதி அமர்வின் போது, ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படியான விடயத்தையே இங்கு கூறவுள்ளேன்.

ஜனநாயக முறையிலான திட்டமிடல், கருத்திட்டங்களை இனங்காணல் மற்றும் நடைமுறைப்படுத்தல் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதான இந்த நிகழ்ச்சித் திட்டத்தை பாராட்டுகிறோம்.

இந்நிகழ்ச்சித் திட்டமானது மாவட்டச் செயலாளர்களுக்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் நிதியை விடுவித்தல் தொடர்பாக விரித்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இத்திட்டம் தொடர்பில் பிரதேச செயலாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், விவசாய ஆராய்ச்சி அலுவலர்கள், கிராம அதிகாரிகள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், குடும்ப சுகாதார உத்தியோகஸ்தர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், அரசியல் தலைவர்கள், ஆகியோரின் ஈடுபாடுகள் பற்றியும் விரித்துரைக்கப்படுகின்றன.

ஆயினும், இது விடயத்தில் தங்கள் அமைச்சால் விதித்துரைக்கப்பட்ட வழிமுறை நிரலின்படியான கொள்கைகளும், நடைமுறைகளும் விசேடமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிப்படையாகவே மீறப்படுவதனை மிக வருத்தத்துடன் அறியத்தருகின்றேன்.

மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களாக விளங்கும் அரசியல் தலைவர்கள், இந்நிகழ்சித் திட்டத்தில் உள்வாங்கப்படாது இருப்பதாகவே தோன்றுகிறது.

இது இவ்வாறிருக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேச சபைகளிலுள்ள ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், தமது கட்சிக்கு ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலிருந்தும் தலா ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கருத்திட்ட முன்மொழிவுகளை அதற்கென தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் கூட்டமைப்பு உறுப்பினர்களை கோரி வருகின்றனர்.

இது முற்றுமுழுதாக ஏற்றுக்கொள்ள முடியாதததும் திட்டவழிமுறை நிரலின் விதிகளை அப்பட்டமாக மீறுவதுமாகும். இதில் குறிப்பிடத்தக்க துன்பகரமான விடயம் யாதெனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமன்றி சம்பந்தப்பட்ட பகுதி அரசியல் தலைவர்களும் அத்தகைய திட்டம் பற்றி அறிய முடியாத நிலையிலிருப்பதாகும். இந்நிலையானது நல்லாட்சி வெளிப்படைத்தன்மை ஆகிய சீர் இலக்குகளை மீறுவதாகவுள்ளது.

ஆகவே, இது விடயமாக தங்கள் அமைச்சின் கைநூல் வழிகாட்டலை இறுக்கமாக பின்பற்றுமாறு குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்களை பணிக்குமாறும் ஈ.பி.டி.பி பிரதேச சபை உறுப்பினர்களின் அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தவும்.

இது விடயத்தில் தங்களின் அமைச்சால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறும் பணிக்கும்படியும் கோருகிறோம்’ என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Related Posts