கௌரவ ஆளுநர் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் விவசாய, கால்நடை அபிவிருத்தி, காணி, நீர்ப்பாசன, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 11 இயந்திர வெட்டும் வாள்கள், 22 பாதுகாப்பு பட்டிகள், 44 சோடி கால் பாதுகாப்பு கவசங்கள், 44 லொப்பருடன் கூடிய கையால் வெட்டும் வாள்கள் மற்றும் 33 உயரம் சீர்செய்யக்கூடிய ஏணிகள் உணவு விவசாய நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு கடந்த 10ம் திகதி மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற விநியோக நிகழ்வில் பழ உற்பத்தியாளர்கள் சங்கங்களின் இளைஞர் குழுக்களிற்கு வழங்கப்பட்டது.
சாவகச்சேரி, கைதடி, புத்தூர், உரும்பிராய், உடுவில், சண்டிலிப்பாய், தொல்புரம், தெல்லிப்பளை, கரவெட்டி, பருத்தித்துறை மற்றும் நல்லூர் ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளின் கீழ் உள்ள பழ உற்பத்தியாளர் குழுக்களிற்கு தலா ஒரு இயந்திர வெட்டும் வாள், இரண்டு பாதுகாப்பு பட்டிகள், நான்கு சோடி கால் பாதுகாப்பு கவசங்கள், நான்கு லொப்பருடன் கூடிய கையால் வெட்டும் வாள்கள் மற்றும் மூன்று உயரம் சீர்செய்யக்கூடிய ஏணிகள் என்பன வழங்கப்பட்டன.
அதிக அடர்த்தியான மற்றும் வயதான மாமரங்களின் கிளைகளை கத்தரித்தலானது குறித்த கத்தரிக்கப்பட்ட மாமரங்கள் அடுத்துவரும் பருவத்தில் கூடுதலான உற்பத்தியை பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு செயற்பாடாகும். யாழ் மாவட்டத்தில் 2009 ம் ஆண்டு விவசாயத் திணைக்களத்தினால் மாமரங்களை கத்தரிக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. இதன் மூலம் அதனை தொடர்ந்து வந்த வருடங்களில் கூடுதலான விளைவை பெற முடிந்தது.
விவசாயத் திணைக்களத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இவ்வைபவத்தில் திருமதி. விஜயலட்சுமி ரமேஸ், பிரமத செயலாளர், வட மாகாணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும், கௌரவ விருந்தினர்களாக திரு.இ.இளங்கோவன், ஆளுநரின் செயலாளர், வட மாகாணம், திரு.யு.எல்.எம்.ஹால்தீன், செயலாளர், விவசாய, கால்நடை அபிவிருத்தி, காணி, நீர்ப்பாசன, கடற்றொழில் அமைச்சு, கலாநிதி.எஸ்.ஞானச்சந்திரன், பிரதேச இணைப்பாளர் – வடக்கு, உணவு விவசாய நிறுவனம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். திரு.எஸ்.சிவகுமார், மாகாண விவசாயப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், திரு.பி.தயானந்தன், மாகாண காணி ஆணையாளர், வட மாகாணம், வைத்தியர்.எஸ்.வசீகரன், மாகாண பணிப்பாளர், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம், வட மாகாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் விவாசயத் திணைக்களத்தினை சார்ந்த உத்தியோகத்தர்களும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.
பழ உற்பத்தியாளர் சங்கங்களின் இளைஞர் குழுக்களிற்கு மாமரங்களை கத்தரிக்கும் உபகரணங்கள், கருவிகளை பிரமத விருந்தினர் மற்றும் கௌரவ விருந்தினர்கள்; விநியோகித்தனர்.