பழுதடைந்த உணவு விநியோகம்: மண்டப முகாமையாளர் பிணையில் விடுதலை!

யாழ்.உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் பழுதடைந்த உணவினைப் பரிமாறிய குற்றசாட்டில் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மண்டபத்தின் முகாமையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.

யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை விசாரித்த யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி சி.சதிதரன் மண்டப முகாமையாளரை பிணையில் செல்ல அனுமதித்து வழக்கினை பிறிதொரு திகதிக்கு ஒத்திவைத்தார்.

உரும்பிராய் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற திருமண வைபவத்தின் போது பரிமாறப்பட்ட உணவுப் பதார்த்தங்கள் பழுதடைந்தமையால், அதனை உட்கொண்ட மூவர் பாதிக்கப்பட்டனர்.

அது தொடர்பில் அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகர் மற்றும் கோப்பாய் பொலிசாருக்கு திருமண வீட்டார் அறிவித்ததை அடுத்து குறித்த மண்டபத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் பழுதடைந்த உணவுப் பொருட்களைக் கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், குறித்த மண்டப முகாமையாளருக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

Related Posts