பழிதீர்க்குமா இலங்கை?

இலங்கை, அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 2.30மணிக்கு கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பிக்கிறது.

CRICKET-SRI-AUS

சொந்த மண்ணில் இடம்பெறுகின்ற தொடராக இருந்தாலும் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி வென்ற நிலையில் அழுத்தத்துடனேயே இலங்கை அணி களமிறங்குகிறது. முதலாவது போட்டியில் ஆறு சுழற்பந்துவீச்சாளர்கள் தெரிவுடன் இலங்கையணி களமிறங்கியிருந்த போதும் அறிமுக வீரரான அமில அபோன்ஸோ மட்டுமே கட்டுக்கோப்புடன் பந்துவீசியிருந்தார். தவிர, அணித்தலைவர் அஞ்செலோ மத்தியூஸ் தெரிவித்திருந்தது போல மத்திய வரிசை துடுப்பாட்டவீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது பின்னடைவாய் அமைந்திருந்தது. எனவே மத்திய வரிசை துடுப்பாட்டவீரர்களிடமிருந்து இப்போட்டியில் இலங்கையணி மேலதிக ஓட்டங்களை எதிர்பார்க்கும். தவிர, 40களைத் தொட்டுள்ள சிரேஷ்ட ஆரம்பத் துடுப்பாட்டவீரர் திலகரட்ன டில்ஷானும் இளம் அதிரடி வீரர்களான தனுஷ்க குணதிலக, அமில அபோன்ஸோ ஆகியோரிடமிருந்து அழுத்தத்தை எதிர் கொள்கின்றார்.

மறுபக்கத்தில், முதலாவது போட்டியில் வென்ற உத்வேகத்துடன் களமிறங்கும் அவுஸ்திரேலியா, ஆடுகளம் ஆரம்பம் முதலே சுழலத் தொடங்கியிருந்ததால் ஜோஸ் ஹெசில்வூட்டுக்குப் பதிலாக நேதன் லையனை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, சுழற்பந்தை வீசக்கூடியவராக ட்ரெவிஸ் ஹெட் இருப்பதால், சுழற்பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்ளக் கூடிய ஷோர்ன் மார்ஷ், தொடர்ந்தும் அணிக்கு வெளியேயே இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது போட்டியில் ஆரம்பம் முதலே ஆடுகளம் சுழற்சியை வழங்கிய நிலையில், அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் வீசிய மெதுவான பந்துகள் நின்று திரும்பியதால் இலங்கைத் துடுப்பாட்டவீரர்கள் அதிக கடினத்தன்மையை எதிர்நோக்கியிருந்தனர். எனவே இப்போட்டிக்கான ஆடுகளமும் சுழலக் கூடியதாகவே அமையும் என்றபோதும் ஆரம்பத்திலிலிருந்து சுழலாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்க்கப்படும் இலங்கையணி: குசல் பெரேரா, திலகரட்ன டில்ஷான், குசல் மென்டிஸ், தினேஷ் சந்திமால், அஞ்செலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மிலிந்த சிரிவர்தன, திஸர பெரேரா, டில்ருவான் பெரேரா, அமில அபோன்ஸோ, லக்ஷன் சந்தகான்

எதிர்பார்க்கப்படும் அவுஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபின்ஞ், டேவிட் வோணர், ஸ்டீவன் ஸ்மித், ஜோர்ஜ் பெய்லி, மொய்ஸஸ் ஹென்றிகூஸ், ட்ரெவிஸ் ஹெட், மத்தியூ வேட், ஜேம்ஸ் போக்னர், மிற்செல் ஸ்டார்க், நேதன் லையன், அடம் ஸாம்பா

Related Posts