பூநகரி – பள்ளிக்குடாப் பகுதியில் சிறீலங்காக் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் பணி அப்பகுதி மக்களின் எதிர்ப்பினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் காணிகளை அளவீடுசெய்வதற்காக நிலஅளவையாளர்கள் அங்கு சென்றிருந்தவேளை அப்பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இப்பணி இடை நிறுத்தப்பட்டது.
குறித்த காணி தேவாலயத்திற்குச் சொந்தமான காணி எனவும் இதனை தாம் கடற்படையினருக்கு ஒருபோதும் கொடுக்கமாட்டோம் எனவும் அம்மக்கள் அங்குவந்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் இக்கோரிக்கையை எழுத்துமூலம் வழங்குமாறு நில அளவை அதிகாரிகள் கோரியதற்கமைய மக்கள் எழுத்துமூலம் தமது கோரிக்கையை வழங்கியுள்ளனர்.
இந்நடவடிக்கையின்போது அங்கு வந்த இராணுவத்தினர் மக்களையும், அங்கிருந்த ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.