பளை வரை வந்தது லக்ஸபான மின்சாரம்

20 வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் லக்ஸபான மின்சாரம் நேற்று முதல் பளைப் பகுதிக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக 91ம் ஆண்டுக்குப் பின்னர் லக்ஸபான மின்விநியோகம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.

லக்ஸபான மின் விநியோகத்துக்கென நிறுவப்பட்டிருந்த மின் தூண்களும் பல இடங்களில் அகற்றப்பட்டிருந்தன. இந்த நிலையில் போர் முடிவுக்கு வந்த பின்னர் மீண்டும் லக்ஸபான மின் விநியோகத்தை வட பகுதி முழுவதும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப்படையில் கிளிநொச்சி வரை லக்ஸபான மின் விநியோகம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி முதல் பளைப்பகுதிக்கும் லக்ஸபான மின் விநியோகம் கிட்டியது. வெகு விரைவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் கொடிகாமம் பகுதி வரை லக்ஸபான மின்விநியோகம் வழங்கப்படவுள்ளது என்று மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை குடாநாட்டின் ஏனைய பகுதிகளில் லக்ஸபான மின்விநியோகத்துக்கான மின் தூண்களை நிறுவுதல், கிளிநொச்சியிலிருந்து சுன்னாகம் வரையான மின் பரிமாற்ற நிலையத்தை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் இடம்பெறவுள்ளன. இதனால் ஏறக்குறைய இன்னும் ஒரு வருடத்துக்குப் பின்னரே குடாநாடு முழுவதும் லக்ஸபான மின்சாரத்தை வழங்குவது சாத்தியமாகும். தென்மராட்சிப் பகுதிக்கு லக்ஸபான மின்சாரத்தை வழங்குவதன் மூலம் யாழ்ப்பாணத்தில் ஏனைய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மின்வெட்டு நேரத்தை குறைக்க முடியும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

Related Posts