Ad Widget

பளையில் மிதிவெடி; எஜமானைக் காப்பாற்றிய நாய்

மிதிவெடியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த தனது எஜமானின் உயிரை சமயோசிதமாகச் செயற்பட்டுக் காப்பாற்றியுள்ளது ஒரு நாய். உடனே எங்கோ வெளிநாட்டில் நடந்த சம்பவம் என்று எண்ணிவிடாதீகள். இந்தச் சம்பவம் பளை, இத்தாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மிதிவெடியில் இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய சு.செல்வராஜா தனது வளர்ப்பு நாயுடன் கடந்த திங்கட்கிழமை மதியம் முயல் வேட்டைக்குக் கிளம்பியுள்ளார்.

முன்னால் சென்ற அவரது நாய் முயல் ஒன்றைக் கண்டுவிட்டு, அதனைத் துரத்தத் தொடங்கியது. செல்வராஜாவும் நாயின் பின்னால் ஓடியுள்ளார். முயலைத் துரத்திக் கொண்டு செல்வராஜாவும் அவரது நாயும் வள்ளிமனை தோட்டப் பகுதிக்கு சென்றனர்.

அப்போதுதான் அந்த அனர்த்தம் நடந்தது.செல்வராஜாவின் வலதுகால் அங்கிருந்த மிதிவெடியயான்றில் சிக்கியது. அவரது வலதுகால் படுகாயமடைந்த நிலையில் அவர் தூக்கி வீசப்பட்டார். அதிகளவு இரத்தம் வெளியேறியதால், செல்வராஜா மயக்கநிலையை அடையத் தொடங்கினார்.

தமது குடுத்தினருக்கு தொலைபேசி மூலம் அவர் அழைப்பை ஏற்படுத்தியபோதும், அவரால் பேசமுடியவில்லை. இந்த அனர்ந்தம் நடந்தது அவரது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால்.வெடிப்பொலியையும், தந்தையின் தொலைபேசி அழைப்பையும் வைத்து செல்வராஜாவின் மகன் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை ஓரளவு ஊகித்துக் கொண்டார்.

உறவினர்களை அழைத்துக் கொண்டு தந்தையைத் தேடுவதற்கு அவர் ஆயத்தப்படுத்தியபோதும், தந்தை எங்கிருக்கின்றார் என்பதை ஊகிக்க முடியாது அவர் திண்டாடினார். இரத்தப்போக்கு அதிகரித்தால் செல்வராஜாவின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்பதை உணர்ந்த அவர்கள் என்ன செய்வதென்று அறியாது பதறிப்போயிருந்தனர்.

அப்போதுதான் அந்தச் சம்பவம் நடத்தது. செல்வராஜாவுடன் சென்ற அவரது நாய், வேகமாக வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தது. வந்தநாய் செல்வராஜாவின் மகனின் மீது பாய்ந்து, பிடித்து இழுத்ததுடன் அவரைப் பார்த்துத் குரைத்தவாறு அங்கும், இங்கும் ஓடியது. அவரைப் பார்த்துப் பலமாகக் குரைத்த நாய் மீண்டும் வந்தவழியே பாய்ந்தோடத் தொடங்கியது.

நாயின் செயற்பாடுகளை அவதானித்த, செல்வராஜாவின் மகனும், உறவினர்களும் நாயின் பின்னே வேகமாகச் செல்லத் தொடங்கினர். சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் அழைத்துச் சென்ற நாய், படுகாயமடைந்தநிலையில் மயங்கிக் கிடந்த செல்வராஜாவை அவர்களுக்குக் காட்டியது.

உடனடியாக அவர் பளை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அவரது வலது கால் அகற்றப்பட்டபோதும், உயிர் காப்பாற்றப்பட்டது. அவரது வளர்ப்பு நாயின் சமயோசித நடவடிக்கையைப் பலரும் சிலாகித்துப் பேசியதைக் காணமுடிந்தது.

Related Posts