விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட பல அமைப்புக்கள் மீது விதித்திருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது.
ஆனாலும், தமிழீழ விடுதலைப் புலிகள், நாடுகடந்த தமிழீழ அரசு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, மற்றும் ஏனைய சில அமைப்புகள் மீதான தடை தொடரும் என வெள்ளிக்கிழமை இரவு அரசு வெளியிட்டுள்ள சிறப்பு வர்த்தமானி அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை, கனேடியன் தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலியன் தமிழ் காங்கிரஸ் உட்பட, ஏனைய சில அமைப்புக்களின மீதான தடையும் நீக்கப்பட்டுள்ளதையும் அரசின் இந்த விசேஷ வர்த்தமானியின் மூலம் அறிய முடிகிறது.
தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து நவம்பர் 20ம் திகதியிட்டு வெளியாகியுள்ள இந்த திருத்தம் செய்யப்பட்ட அரச வர்த்தமானியில் முன்னர் தடை விதிக்கப்பட்டிருந்த பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
கடந்த 2012ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நபர்கள் மற்றும் அமைப்புகள் மீதான தடை விதிக்கப்பட்டிருந்தன.
இவர்கள் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பிற்கும் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலானவர்கள் என தெரிவித்தே அப்போது தனி நபர்கள், அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்து இலங்கை அரசு பட்டியல் ஒன்றை வெளியிட்டிருந்தது.