Ad Widget

பல்வேறு அரசியல் கட்சியினரைச் சந்திக்கும் கூடங்குளம் போராட்டக் குழு

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மூன்றாவது, நான்காவது அணு உலைகளைத் திறக்க்க்கூடாது என்பதை வலியுறுத்தி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார்.

koodankulam_udayakumar

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கூடங்குளம் அணு உலையில் தற்போது இரண்டு யூனிட்டுகள் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒரு யூனிட்டில் மின் உற்பத்தி துவங்கப்பட்டிருக்கிறது. மேலும் 2 யூனிட்டுகளை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக நீண்டகாலமாக அப்பகுதியில் போராட்டத்தை நடத்திவரும் அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சுப. உதயகுமார், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்து, மூன்றாவது, நான்காவது அணு உலைகளை நிறுவக்கூடாது, முதலிரண்டு அணு உலைகள் பற்றி ஒரு சார்பற்ற சுதந்திரமான விசாரணை வேண்டும், இந்தியாவின் அணுசக்திக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை வலியுறுத்திவருகிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி.ஸ். ஞானதேசிகன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நல்ல கண்ணு ஆகியோரை அவர் சந்தித்து தனது கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார். நேற்று, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினையும் உதயகுமார் சந்தித்தார்.
காங்கிரஸ், தி.மு.க. போன்ற கட்சிகளின் அணு உலை ஆதரவு நிலைப்பாட்டை கடுமையாக விமர்சனம் செய்துவந்த நிலையில், அவர்களைச் சந்தித்திருப்பது ஏன் என உதயகுமாரிடம் கேட்டபோது, “இந்தக் கட்சிகள் ஆளும் கட்சியாக இருந்தபோது, அதிகாரவர்க்கத்தின் குரலை கேட்டிருக்கலாம்; தற்போது எதிர்க்கட்சியாக மாறியிருக்கும் நிலையில், அவர்கள் எங்கள் கோரிக்கைக்கு செவிமெடுக்கலாம்” என்ற நம்பிக்கையில் ஆதரவு திரட்டிவருவதாகத் தெரிவித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி, தொடர்ந்து அணு உலைகளை ஆதரித்துவந்திருக்கும் நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரான பி.எஸ். ஞானதேசிகன், போராட்டக் குழுவின் தலைவரான உதயகுமார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். உதயகுமாரை சந்தித்த பிறகு இந்தச் சந்திப்பு குறித்து பேசிய ஞானதேசிகன், “அணு உலை எதிர்ப்பாளர்களிடம் முன்பு காங்கிரஸ் எதிர்ப்பே முனைப்பாக இருந்தது. தற்போது போல முன்பே விளக்கமளித்திருக்கலாம். அணு உலைகளை ஆதரிப்பதுதான் காங்கிரசின் நிலைபாடு. இருந்தபோதும், பிற தலைவர்களிடமும் இது குறித்து பேசி முடிவெடுப்போம்” என்று குறிப்பிட்டார்.

எத்தனை அரசியல் கட்சிகளைத் தம் பக்கம் இழுக்க முடியுமோ அத்தனை அரசியல் கட்சிகளை இழுப்பது சாதகமாக இருக்கும் என்ற நோக்கிலேயே தற்போது அனைத்து கட்சியினரையும் சந்தித்து வருவதாக உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதுவரை, முன்னாள் அமைச்சர் ஜி.கே. வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரைச் சந்தித்திருக்கும் உதயகுமார், தமிழக முதலமைச்சரைச் சந்திக்க முயன்று வருவதாகவும் தெரிவித்தார்.

Related Posts