பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை – விக்கி

சிறிலங்கா அதிபரை நாடிச்சென்று, அவர் தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணசபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், அதிகாரிகளுக்கான ஆண்டுஇறுதி கருத்துப் பரிமாற்றக் கூட்டம் யாழ் பொது நூலக மண்டபத்தில் நேற்று மாலை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் உரையாற்றினார். அந்த உரையில் அவர்-

”பழையது போகின்றது. நாளை புதியது பிறக்கப் போகின்றது!

நாம் சேர்ந்து நன்றாக மகிழ்வடைய வழி அமைக்காமல் “இது என்ன இந்த நேரத்தில் ஒரு கருத்தரங்கம்? இது அவசியமா?” என்ற கேள்விதான் ஒவ்வோர் சகோதர சகோதரியர் மனதிலும் எழுங் கேள்வியாக இருக்கும்.

ஆனால் இக் கருத்துப் பரிமாற்றக் கூட்டமானது எனக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.எமது நாட்டின் அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு அலகே எமது வட மாகாண சபை.

1987ஆம் ஆண்டில் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக வெளியானதே இந்த 13வது திருத்தச் சட்டம்.தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வழிவகுப்பதாகக் கூறியே இந்தத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

எங்கே அந்தச் சட்டத்தை தமிழ் பேசும் மக்கள் சார்பாகக் கொண்டு வந்தால் சிங்களமக்கள் தன்னைத் துரோகியாகக் கணிப்பார்களோ என்ற பயத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன நாடு முழுவதற்குந்தான் அதிகாரப் பரவலாக்கத்தைத் தரப்போவதாகக் கூறி 13வது திருத்தச் சட்டத்தையும் அதன் வழிவந்த 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்கச் சட்டமான மாகாணசபைகள் சட்டத்தையும் கொண்டு வந்தார்.

அவற்றில் அவர் ஒரு கையால் கொடுத்து மறுகையால் திருப்பி எடுக்கும் தமது கைவந்த நரிக்கலையை உட்புகுத்தியிருந்தார்.கொடுப்பது போல் கொடுத்து அதற்கு ஆளுநரின் அனுமதி பெற வேண்டும் என்ற சரத்தை உள்ளடக்கி எதையும் கொடுக்காது அதிகாரத்தை ஆளுநர் ஊடாக மத்திய அரசாங்கம் வசம் வைத்துக் கொள்ள வழி வகுத்தார்.

சென்ற 25 வருட காலத்திற்கு மேலாக அந்தச் சட்டம் மற்றைய மாகாணங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பினும் மத்திக்கும் மாகாணத்திற்கும் இடையில் மனதறிந்த முரண்பாடுகள் இல்லாத போது மத்தியின் உள்ளீடல்கள் மாகாணங்களுக்கு மலைப்பைக் கொடுக்கவில்லை. மனவருத்தத்தையும் அளிக்கவில்லை.

பிள்ளையான் மட்டும் மட்டுநகரில் இருந்து ஒரு முறை குரல் கொடுத்தார். மாகாண மருத்துவமனையில் ஒரு மருத்துவத் தாதியைச் சுயமாக நியமிக்கும் அதிகாரங்கூட எனக்கில்லையே என்றார். மத்தி, மாகாணத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய விதத்தில் தான் இந்தத் திருத்தச் சட்டம் அமைந்திருந்தது.

அதன் பின் திவிநகும சட்டம், 18வது திருத்தச் சட்டம், மகாவலிச் சட்டம் மேலும் வட கிழக்கைப் பிரித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று பல விதங்களில் முன்னர் 13வது திருத்தச் சட்டத்தில் கொடுத்த அதிகாரங்களைக் கூடத் திருப்பி மத்திய அரசாங்கம் தன் வசப்படுத்தக் கூடிய விதத்தில் சட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

ஆளுநருடன் முரண்படாதவிடத்து இவையெல்லாவற்றையும் சர்வ சாதாரணமாக நடைமுறைப்படுத்தி விடலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் போன்றோர் கூறியதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

இதிலே ஒரு விடயத்தை நீங்கள் மனதில் வைத்திருக்க வேண்டும்.

1956ஆம் ஆண்டில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வந்த போது “இரு மொழிகள் ஒரு நாடு; ஒரு மொழி இரு நாடுகள்” என்று கூறிய அதே கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வா என்ற மூத்த அரசியல்வாதியும் சட்டத்தரணியும் சரித்திராசிரியருமான அவர், நிறைவேற்று அதிகாரங் கொண்ட அதிபர் என்ற பதவியை ஜே.ஆர் உருவாக்கிய போது கூறினார் “டிக்கி! (கல்லூரிக் காலத்தில் ஜே.ஆரை அவ்வாறு தான் அழைத்தார்கள்!) உன் காலத்தில் இந்தச் சட்டத்தை வேண்டுமானால் நீ நடைமுறைப்படுத்து. ஆனால் நீ போகும் போது இச்சட்டத்தை இரத்துச் செய்து நாடாளுமன்ற அதிகாரம் நிலைக்க வழி வகுத்து விட்டு செல். உனக்குப் பின் வரும் ஒருவன் உன்னைப் போல் அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டான். கொடூரமாக அவன் இதனை நடைமுறைப் படுத்தக்கூடும்” என்றாராம்.

அதாவது அதிகாரம் என்பது ஒருவர் வசம் இருந்து அந்த அதிகாரத்தைப் பாவிக்கும் போது சட்டதிட்டங்களுக்கு அமைவாக, மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாக்கும் விதத்தில், மனிதாபிமான முறையில் பாவிக்கத் தலைப்பட்டால் சட்டம் எவ்வாறு அமைந்திருந்த போதும் அங்கு நல்லாட்சியும் நீதியும் நிலைக்கலாம்.

ஆனால் தான்தோன்றித்தனமாக, ஒருதலைப்பட்சமாகச் சிந்திக்கும் வண்ணம் நடைமுறைப்படுத்த எத்தனித்தால் அங்கு வல்லாட்சி நிலைக்கும்.அதனால்தான் சட்டம் எமது உரித்துக்களை இன்னொருவரின் தன்னிச்சைக்கு ஆட்படுத்தி அமைந்திருப்பதை நாம் எதிர்க்கின்றோம்.அண்டிவாழ நாம் ஆசைப்படாதிருப்பது இந்தக் காரணத்தினால்த்தான்.

ஆளுநரை அண்டிச் சென்று, சிறிலங்கா அதிபரை நாடிச்சென்று, அவர் தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்துப் பல நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ளலாம் என்பது உண்மைதான்.ஆனால் அப்பேர்ப்பட்ட அடிமைத்தனத்தால் நாம் பெறும் நன்மைகள் நிரந்தரமானவை அல்ல. பல் இளிக்கும் வரை தான் பலன் கிடைக்கும்.

நாடும் வரையில்த்தான் நன்மை கிட்டும் என்றென்றும். அண்டி வாழ்ந்தால் தான் அதிக நன்மை அடையலாம்.வடகிழக்கு மாகாண மக்கள் அதற்காகப் போராடவில்லை. அதற்காக உயிர்த் தியாகங்கள் செய்யவில்லை. அதற்காக உடல் ஊனம் அடையவில்லை. அதற்காகக் காணிகளைப் பறிகொடுக்கவில்லை. அதற்காக எம் பெண்கள் தம் வாழ்வை இழக்கவில்லை. அதற்காக எம் இளைஞர்கள் இன்றும் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டு நிற்கவில்லை.

ஆகவே உண்மையான அதிகாரப் பகிர்வை எதிர்பார்த்தே நிற்கின்றனர் எம்மக்கள்.அதனால்தான் நாங்கள் சலுகை அரசியலுக்கு சரிந்து விடாமல் சட்டவாக்க நிவர்த்தியை நாடி நிற்கின்றோம்.

13வது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் பற்றி 1987ஆம் ஆண்டிலேயே, அதாவது நாம் இன்று அனுபவித்து அறிவித்துக் கொண்டிருக்கும் எமது அபிப்பிராயங்களுக்கு முன்னரேயே, திரு.அமிர்தலிங்கம் அவர்கள், சிவசிதம்பரம், சம்பந்தன் ஆகியோர் சகிதம் அப்போதைய இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் பற்றிக் கூறியிருந்தார். அக் குறைபாடுகளுக்கு நாம் இப்பொழுது முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்.அன்று கொள்கை ரீதியாகக் கூறப்பட்டது இன்று அனுபவ ரீதியாகக் எடுத்துக் கூறப்பட்டு வருகிறது.

ஆகவே எங்கள் தோற்றுவாய் தொடக்கத்தில் இருந்தே தொய்வுற்றே இருந்து வருகின்றது.மேற்கு மாகாண ஆளுநர்கள் பலர் என் நண்பர்களாக இருந்தவர்கள். பிரதம நீதியரசர் சர்வானந்தா, நீதியரசர் விக்னராஜா, தற்போதைய ஆளுநர் அலவி மௌலானா – எல்லோருமே மேல் மாகாண அன்றாட நிர்வாக விடயங்களில் தலையிடாது தமது கடமையை ஆற்றி வந்தவர்கள்; வருபவர்கள்.

இங்கும் கிழக்கிலும் மட்டும் படைப்பிரிவில் பதவி வகித்தவர்களைப் பாவித்து மத்திக்குச் சார்பான நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது தற்போதைய அரசாங்கம்.இந்தப் பதினான்கு மாத அனுபவங்கள் எமக்கு எந்தளவுக்கு மத்தியானது மாகாணத்தை மடக்கி ஆள முடியும் என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

உதாரணத்திற்கு அண்மையில் நடைபெற்ற வன்செயல்களைக் குறிப்பிடலாம்.வடமாகாண மக்கள் ஒதுக்கித் தள்ளிய ஒரு கட்சியின் தலைவர் மத்தியின் மதிப்பு தன்பால் இருப்பதால் தொடர்பில்லாதவரைக் கூட்டத்திற்குக் கொண்டு வந்து ஒவ்வாத நடவடிக்கைகள் இடம்பெற இடமளித்தார்.

இவை யாவும் “கருடா சௌக்கியமா?” என்ற கலாசாரத்தையே முன்னிறுத்துகின்றது.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டமானது மாகாண நடவடிக்கைகளுள் மத்தி மூக்கை நுழைக்கவென்றே நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஒரு கூட்டம்.

2013ஆம் ஆண்டு நொவெம்பர் 18ந் திகதிய தமது கடிதத்தால் சிறிலங்கா அதிபர் தமது மகிந்த சிந்தனையை அமுல்படுத்தவே இக் கூட்டத்திற்கு என்னை இணைத்தலைவராக நியமிப்பதாகக் கூறியிருந்தார்.

மகிந்த சிந்தனையை மறுத்து எமது மக்களின் மாகாணசபை மலர்ந்த பின்னரே அவர் இந்த மடலை எனக்கு அனுப்பியிருந்தார்.எனது எதிர்ப்பை அது சம்பந்தமாகத் தெரிவித்து விட்டுத்தான் நான் எனது கடமையைப் பொறுப்பேற்றேன்.

மகிந்த சிந்தனையை விட எம் மக்கள் சிந்தனை மலர வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு.இந்த ஒரு வருடத்திற்கு மேலான வடமாகாண சபை அனுபவம் எமக்கு பின்வருவனவற்றை உணர்த்தியுள்ளன-

1.இருவாறான நிர்வாகங்கள் நடைமுறையில் உள்ளன.

அதாவது மக்கள் ஆணையைப் பெற்றவர்களின் நிர்வாகம் ஒன்று. அரசியல் செல்வாக்கின் நிமித்தமும் 13வது திருத்தச் சட்டம் ஆளுநருக்கு அளித்த தன்னிச்சை அதிகாரத்தின் அடிப்படையிலும் நடாத்தப்படும் நிர்வாகம் மற்றையது.

2.மாகாண நிர்வாகக் கட்டமைப்பில் மத்தியின் உள்ளீடல் செறிந்து காணப்படுகின்றது.

அதாவது மாவட்டச் செயலாளரின் பிரத்தியேக நிர்வாக முறைமை, திவிநெகும திட்டம் போன்றவற்றால் மத்தியின் உள்ளீடல், மேலும் நிதியங்கள் சம்பந்தமாக மத்திக்கு இருக்கும் கட்டுப்பாட்டு அதிகாரங்கள் போன்ற பலதும் மாகாணத்தைச் சுயமாக நடக்கவிடாமல், மத்தியானது தன்னை நாம் நாடிவரச் செய்வதாய் அமைந்துள்ளது. நாடிச் சென்றால் கூட பரவாயில்லை. ஆனால் நாடிச் சென்ற பின் அவர்களின் நாற்றமெடுக்கும் அரசியலிலும் நாம் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர் பார்க்கின்றார்கள்.

3. எம்மை வாட்டுவது அளவுக்கதிகமான படையினரின் தொடர் பிரசன்னம்.

எமது மக்கள் வாழ்வு, வாழ்வாதாரம், மாண்பு, மனித உரிமைகள் யாவும் பாதிக்கப்படுவதாகவே அவர்களின் பிரசன்னம் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் வெளியிடங்களில் இருந்து எமக்குத் தெரியாமலே வெளியார்களைக் கொண்டு வந்து குடியமர்த்துந் திட்டமும் அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இராணுவத்தினருக்காக பத்தாயிரம் வீடுகள் கிளிநொச்சியில் கட்டப்பட்டுள்ளன. இவை யாவும் இம் மாகாண மக்களை அடிமைகளாக வாழ வைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் வடமாகாண மக்கள் பரம்பலை மாற்றி அமைக்கும் நோக்கிலும் மத்தி நடத்தும் மமகாரச் செயல்கள் என்று தெரிகின்றது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் வெளியில் இருந்து கொண்டு வந்து வவுனியா பிரதேசத்தில் படையினர் குடியேற்றிய நபர்கள் பற்றி கேள்வியொன்று மாவட்ட அதிபரிடம் கேட்டிருந்தேன்.

இன்று வரையில் அதற்குப் பதில் இல்லை. இரு முறைகள் நினைவூட்டுக் கடிதங்களும் அனுப்பியாகிவிட்டது. உத்தியோகப்பற்றற்ற முறையில் அவர் கூறியதாக அறியவருவது “படையினர் மீது தமக்கு அதிகாரம் இல்லை” என்பதே.

ஆகவே மாகாண சபையானது எப்பேர்ப்பட்ட வலுவற்ற, பலமற்ற, அதிகாரம் குறைந்த அலகாக இப்பொழுது வடமாகாணத்தில் இயங்கி வருகின்றது என்பதை நான் கூறி நீங்கள் தெரியவேண்டியதில்லை.

“பணிந்து போனால் என்ன?” என்று பலர் தெற்கிலும் இங்கும் கூறுவதைக் கேட்டுள்ளேன்.
இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தில் செய்து கொண்டிருப்பதை இவர்கள் இங்கு செயற்படுத்தி வருகின்றார்கள்.இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தில் செய்து கொண்டிருப்பதை இவர்கள் இங்கு செயற்படுத்தி வருகின்றார்கள்.

எனக்குத் தெரிந்த மலையக மக்கள் சிலர் வத்தளையில் பல வருடங்களுக்கு முன்னர் வந்து குடியேறினர். தமிழில் போதிக்கும் நல்ல கல்லூரிகள் அங்கு இல்லாததால் சிங்கள மொழியில் அவர்களின் குழந்தைகள் கல்வி கற்றார்கள்.

பின்னர் தமது பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றிக் கொண்டார்கள். சிங்களப் படப் பாட்டுக்களையே ரேடியோவில் போட்டுக் கேட்டார்கள்.இன்று அந்தத் தமிழ்ப் பேசிய குடும்பங்கள் சிங்கள மக்களாகவே மாறியுள்ளார்கள்.

உயிரோடிருக்கும் பாட்டன் – பாட்டிகள் மட்டும் தமிழில் பேசுகின்றார்கள். இதனை இன அழிப்பு என்று கூறலாமோ தெரியாது.தமிழில் கல்வி கற்க வசதி அளிக்காதது கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்படலாம்.ஆனால் முன்னர் அங்கு வந்து குடியேறிய தமிழ்ப்பேசும் குடும்பங்களின் அடையாளம் 60, 70 வருடங்களுக்குப் பிறகு முற்றாக மாற்றமடைந்துள்ளது என்பது உண்மை.

இதையே வடகிழக்கு மாகாணங்களில் மத்திய அரசாங்கம் வேறுவிதத்தில் செய்ய நினைக்கின்றது.அதாவது சிங்கள மக்களை, இராணுவத்தினரைப் பெருவாரியாக எமது மக்களிடையே குடியமர்த்தி அவர்கள் வாழ்க்கை முறையை மாற்ற எத்தனிக்கின்றார்கள.

இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தில் செய்து கொண்டிருப்பதை இவர்கள் இங்கு செயற்படுத்தி வருகின்றார்கள்.மேலும் புத்த சிலைகள் இதன் பொருட்டு கட்டப்படுகின்றன. இவற்றிற்கு இடமளிக்க எம் மக்கள் முன் வந்தார்களானால் மற்றைய மாகாணங்களில் நடைபெறும் மாகாண ஆட்சி, எமக்கும் நல்லதாக, நலம் தருவதாக அமையும் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளலாம்.

ஆனால் எமது தனித்துவம் பறிபோய் விடும். நாம் எல்லோரும் பௌத்த சிங்களவரே என்ற கோஷத்திற்கு அடி பணிய நேரிடும்.இவ்வாறு இல்லை என்றால் நாம் முட்டி மோதி முரண்படுவதில் பிழையில்லை என்றே கொள்ள வேண்டும்.

இறுதியாக எமது சவால்களைப் பற்றியும் அதற்கான நிவாரணங்கள் பற்றியும் ஆராய்வோம்.எமது நிர்வாகம் பற்றிய சவால்களை நீங்கள் தான் எனக்கெடுத்து இயம்ப வேண்டும். அவை பற்றி நான் கூறமாட்டேன்.பொது சவால்களையும் அது பற்றி என்ன செய்யவேண்டும் என்றும் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.

முதலாவது பொது மக்கள் வாழ்க்கையில் இராணுவம் உள் நுழைவதை உடனே நிறுத்த வேண்டும். மக்கள் சுதந்திரத்துடனும் பயப்பீதி இல்லாமலும் தமது மண்ணில் நடமாட இடமளிக்க வேண்டும். போர் முடிந்தும் போர் வீரர்கள் தொடர்ந்திங்கிருப்பது எப்பொழுதேனும் வன் செயல்களில் அவர்களோ மற்றவர்களோ ஈடுபடக் கூடும் என்பதை எடுத்துக் காட்டும்.

உண்மையில் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மக்கள் பாதுகாப்பு, சட்ட ஒழுங்கு போன்றவை பொலிசினாலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் சுதந்திரமான பொலிஸ் ஆணைக் குழுவை நியமிக்க முடியாமல் செய்துள்ளது 18வது திருத்தச் சட்டம்.

பொலிசார் இங்கு பெருமளவில் கொண்டு வரப்பட்டு இராணுவத்தினர் படிப்படியாகக் குறைக்கப்பட்டாலும் பொலிசார் இடையே தமிழ்ப் பேசும் பொலிஸ் அதிகாரிகள், அலுவலர்கள் இருப்பது மிக அவசியமாகும்.

அவ்வாறு இருந்தால்த்தான் அவர்கள் மக்கள் மனமறிந்து, தேவைகள் அறிந்து செயற்பட முடியும்.மக்களின் காணிகளை மக்களுக்கே இராணுவம் மீளக் கையளிக்காது இருப்பது ஒரு மிகப் பெரிய சவாலாக இருக்கின்றது. ஒவ்வொரு குடிமகனும் தன் சொந்தக் காணியில்ப் போய் திரும்பவும் குடியிருக்க வழி அமைத்துக் கொடுக்க வேண்டும்.

எமது காணிகளை அரசாங்கமும், அரசியல்வாதிகளும், இராணுவமும் கையேற்பதை அடியோடு நிறுத்த வேண்டும். மில்ரோய் பெர்ணாண்டோ என்ற ஒரு தெற்கத்தைய அரசியல்வாதி வவுனியாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் குடியிருக்கும் மக்களை வெளியேற்றிக் காணியைத் தனக்குத் தருமாறு நிர்ப்பந்தித்துக் கொண்டு வருகின்றார் என்று கேள்விப்படுகின்றேன்.

ஆகவே காணி சம்பந்தமான சவாலை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.எமது வடமாகாணத்தைக் கட்டி எழுப்புவதாகில் நாம் என்ன செய்ய வேண்டும்?எமது வடமாகாணத்தை அபிவிருத்தி செய்ய, வலுப்படுத்த நாம் விஞ்ஞான பூர்வமாகக் காலடி எடுத்து வைப்பது உசிதமெனக் கருதுகின்றேன்.

2002/2003ம் ஆண்டுகளில் எமது தேவைகள் சம்பந்தமான ஒரு முழுமையான பல்தரப்பட்ட தேவைக் கணிப்பு வடமாகாணத்தில் நடாத்தப்பட்டது.போரின் பின்னரான மக்கள் நிலை, அவர்களின் வாழ்வுநிலை அபிவிருத்தி போன்றன எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிய இந்தக் கணிப்பானது நடத்தப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

அதைப் போல் மீண்டும் ஒரு முறை செய்யுமாறு ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதியிடம் கோரினேன்.ஆனால் அரசாங்க அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து நாம் கோரியதன் ஒரு சிறு பகுதியை மட்டும் ஆராய அவர் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.அதாவது மனிதவளங்கள் பற்றி மட்டும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

வடமாகாணத்தின் முன்னேற்றமும் அபிவிருத்தியும் எம் கைவசம் இல்லாமல் வேறெங்கோ இருந்து கொள்கைகள் வகுத்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.உதாரணத்திற்கு ஜனாதிபதி செயலணி 2009ஆம் ஆண்டு ஏப்ரில் மாதத்தில் உருவாக்கப்பட்டது.

அது பாதுகாப்பு அமைச்சின் தேவைக்கேற்பவே அதன் நோக்குக்கு அமையவே செயலாற்றி வந்துள்ளது.தமிழ்பபேசும் குடும்பங்களின் அடையாளம் 60, 70 வருடங்களுக்குப் பிறகு முற்றாக மாற்றமடைந்துள்ளது

அண்மையில் அது நீக்கப்பட்டாலும் மத்தியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட திணைக்களம் அதன் வேலைகளைத் தற்போது கண்காணித்துக் கொண்டு வருகின்றது.சுருக்கமாக எமது மாகாண சபையைச் சுதந்திரமாக இயங்க வைக்க மத்திய அரசாங்கம் தடைகளை உருவாக்கி வருகின்றது.

எமக்கு ஆளணி பற்றாக்குறை, தகைமை பொருந்திய அலுவலர் பற்றாக்குறை என்று பல பற்றாக்குறைகள் உள்ளன.இது சம்பந்தமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள எமது வடமாகாண சபை பல விதங்களில் ஆராய்ந்து வருகின்றது.

நிதிப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகளுடன் ஆராய்ந்து வருகின்றோம்.வீட்டுத் திட்டங்களில் உள்நுழைந்திருக்கும் ஊழல்களை நீக்கி உரியவாறு தேவையுள்ளவர்களுக்கு வீடுகள் கிடைக்க வழிகள் வகுத்துக் கொண்டு இருக்கின்றோம்.

அநியாயமாக சிறையில் வாடும் கைதிகளின் நலம் நாடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம்.பல சவால்கள் எம்மை நோக்கியுள்ளன. அவற்றை வருங்காலத்தில் நாம் யாவரும் சேர்ந்தே தடுத்து நிறுத்த வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

மேலும் பல சவால்களை நாளாந்தம் நீங்கள் முகம் கொடுக்க வேண்டிய கட்டத்தில் நீங்கள் இருக்கக் கூடும். அவற்றை எல்லாம் கலந்துறவாடி அவற்றிற்கான உரிய தீர்மானங்களைக் கண்டறிவதே இன்றைய கூட்டத்தின் குறிக்கோள்.

நான் சற்று நோயுற்ற நிலையில் இருக்கின்றேன். இப்பொழுதும் மருந்து எடுத்துக் கொண்டு இருப்பதால் நான் அதிக நேரத்திற்கு உங்களுடன் உறவாட முடியாததையிட்டு வருந்துகின்றேன்.

வரும் வருடம் எங்கள் யாவரையும் ஒன்று சேர்த்து எங்கள் வடமாகாணத் தமிழ்ப் பேசும் மக்களின் நலம் நாடி எங்கள் யாவரையும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வழி அமைப்பதாக!

இவ் வருடத்தைய பிரிவுகள், பிரிவினைகள், ஒளிவு மறைவுகள், எரிச்சல் புகைச்சல்கள் வரும் வருடத்தில் மறைந்து அன்பும் புரிந்துணர்வும் மலர்வதாக.” என்று குறிப்பிட்டார்.

Related Posts