பல்கலை விரிவுரையாளர்களது பகிஷ்கரிப்பு தொடர்பில் இன்று இறுதி முடிவு

பகிஸ்கரிப்பினை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக விரிவுரையாளர் சங்க தலைவர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார். கடந்த நான்கு மாத காலமாக நீடித்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை தொடர்பில் இன்றைய தினமே இறுதி முடிவு எட்டப்படவுள்ளதாக விரிவுரையாளர் சங்க தலைவர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்திற்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குமிடையில் ஞாயிறு இரவு முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
தமது கோரிக்கைகள் இதன்போது அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாக ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.
எனினும் இது தொடர்பில் திங்கட்கிழமை இன்று நிதி அமைச்சின் செயலாளர் பீ.ஜீ. ஜெயசுந்தரவுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னர் பகிஸ்கரிப்பை தொடர்வதா ? அல்லது கைவிடுவதா ? என தீர்மானிக்கவுள்ளதாக விரிவுரையாளர் சங்க தலைவர் மேலும் தெரிவித்தார்.
இருப்பினும் மொத்த தேசிய உற்பத்தியில் 6வீதம் கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும் என சங்கத்தினால் கோரப்பட்டிருந்தது. ஆனாலும் அது தொடர்பில் இதுவரை சரியான இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts