பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரைப் பலாலி படைத் தலைமையகத்திற்கு அழைத்துப் பேசிய யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியின் கருத்துக்குப் பதிலளிக்கும் வகையில் மாணவர்கள் தமது நிலைமையை விளக்கியுள்ளனர்.
வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நான்கு மாணவர்களில் சிலர், தலைவர் பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருக்கிறார் என நம்பிக் கொண்டிருக்கின்றனர் என்று கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார்.
“பிரபாகரன் இருக்கிறார்; தமிழீழம் கிடைக்கும் என்ற கொள்கைகளையே இன்னமும் அந்த நான்கு மாணவர்களும் பின்பற்றுகிறார்கள். அதனை அவர்களை மறக்கச் சொல்லுங்கள்; அப்படியானால். விரைவில் விடுதலையாவார்கள்.
பிரபாகரன் இருக்கிறார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர் என்பதை புலனாய்வாளர்கள் என்னிடம் கூறினர்” என்று தடுப்பில் உள்ள மாணவர்களின் தாய்மாரிடம் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புனர்வாழ்வு முகாமில் உள்ள நான்கு மாணவர்களையும் யாழ். பல்கலைக்கழக பீடாதிபதிகள் சிலரும் விரிவுரையாளர்களும் நேற்றுச் சென்று பார்வையிட்டனர். தலைவர் பிரபாகரன் பற்றித் தம்மிடம் விசாரணை ஏதும் நடத்தப்படவில்லை என்று அப்போது மாணவர்கள் பீடாதிபதிகளிடம் தெரிவித்துள்ளனர்.
விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் கந்தசாமி, கலைப்பீடாதிபதி பேராசிரியர் வி.பி.சிவநாதன், முகாமைத்துவ பதில் பீடாதிபதி திருமதி அலோசியஸ், பேராசிரியர் மணிவாசகர், மூத்த விரிவுரையாளர் எஸ்.தேவரஞ்சினி ஆகியோர் மாணவர்களைச் சந்தித்துப் பேசினர். அவர்களுடன் மாணவர்களின் பெற்றோர்களும் சென்றிருந்தனர்.
தமது விரைவான விடுதலையை எதிர்பார்த்துத் தாம் காத்திருக்கின்றனர் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்தால் அவர்களை விடுவித்துவிடுவோம் என்று பேராசிரியர்களிடம் முகாம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரான பவானந்தன், அதன் செயலாளர் ப.தர்சானந், ஒன்றிய உறுப்பினர்களான ஜெனமேஜெயந்த், எஸ்.சொலமன் ஆகியோர் நவம்பர் மாத இறுதியில் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கபட்டுள்ளனர்.
அவர்களுக்கு உணவு மற்றும் படிப்பதற்கான புத்தகங்கள் கொடுப்பதற்கு நேற்று அனுமதிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.