பல்கலைக்கழக மாணவர்களுக்குப் புலி முத்திரை குத்தி அவர்களைப் பயங்கர வாதிகளாகச் சித்திரிப்பதை மஹிந்த அரசு இன்னமும் கைவிடவில்லை.
யாழ். பல்கலை மாணவர்களைத் தொடர்ந்து தடுப்பில் வைத்திருப்பதற்காக, அரச தரப்பினர் வாயில் வந்த வார்த்தைகளைப் பிரயோகித்து வருகின்றனர்.
ஜனாதிபதி மஹிந்த, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய, யாழ். கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. ஆகிய நால்வரும் வடக்கிலும், தெற்கிலும் பல்கலைக் கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இராணுவ மயப்படுத்தி சீர்குலைப்பதில் குறிக்கோளாக உள்ளனர்.
இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். “யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புலம்பெயர் புலி ஆதரவாளர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது விசாரணையின்போது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கான புனர்வாழ்வு தொடருமே தவிர, அவர்கள் விடுதலை செய்யப்படமாட்டார்கள்.
அத்துடன், இந்த நாட்டு மக்களைக் கொன்றுக் குவித்து சொத்துகளை அழித்த பயங்கரவாதி வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குத் தீபமேற்றி நினைவஞ்சலி செலுத்துவதற்குப் பல்கலைக்கழகத்தில் இடமளிக்க முடியாது.
எனவே, அதற்கு முன்னின்று செயற்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்” என்று உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எனக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். அதாவது மாணவர் விவகாரத்தை உயர்கல்வி அமைச்சரிடம் ஒப்படைக்கவுள்ளார் எனவும், மிக விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்தார்.
இதனை ஜனாதிபதி என்னிடம் கூறியவேளை உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நாட்டில் இருக்கவில்லை. பின்னர் அவர் நாடு திரும்பியவுடன் இந்த மாணவர் விவகாரத்தை நாம் ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால், அந்த விடயத்தை உடனே யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க கையிலெடுத்தார்.
யாழ். பல்கலைக்கழகச் சமூகத்தை அழைத்த ஹத்துருசிங்க, தடுப்பில் உள்ள மாணவர்கள் பிரபாகரனின் நினைவுடன் இருக்கின்றார்கள் எனவும், புலிகளின் பயிற்சிகளைப் பெற்றுள்ளார்கள் எனவும், மாணவர் விடுதலை இப்போதைக்கு சாத்தியம் இல்லை எனவும் இறுமாப்புடன் கருத்துகளை அள்ளி வீசினார்.
அதனையடுத்து, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவும் தடுப்பில் உள்ள யாழ். பல்கலை மாணவர்கள் சர்வதேச புலி ஆதரவாளர்களுடன் தொடர்பு வைத்துள்ளார்கள் எனவும், அதனை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் எனவும், புனர்வாழ்வின் பின்னரே மாணவர் விடுதலை தொடர்பில் ஆராயப்படும் எனவும் கூறினார்.
இது இவ்வாறிருக்க, இம்மாத முதல் வாரத்தில் பி.பி.ஸிற்குக் கருத்துத் தெரிவித்த உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, “தைப்பொங்கலுக்கு முன்னர் தடுப்பில் உள்ள யாழ். பல்கலை மாணவர் விடுவிக்கப்படுவர்” என்று நம்பிக்கை வெளியிட்டார்.
ஆனால், அவரின் கருத்து தன்னிச்சையான கருத்து என்பதைப் பின்னர் அறிந்தோம். எஸ்.பி. இந்தக் கருத்தைக் கூறியவுடன் அரச தரப்பினர் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகினார் எனவும் அறிந்தோம்.
தனது கருத்தை வாபஸ் பெறுவதற்காகவே கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி வாயில் வந்தமாதிரி கருத்துகளைத் தெரிவித்துள்ளார் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. எனவே, ஜனாதிபதி மஹிந்த, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய, யாழ். கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க, உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. ஆகிய நால்வரும் வடக்கிலும், தெற்கிலும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைச் சீர்குலைப்பதில் குறிக்கோளாக உள்ளனர்” என்று தெரிவித்தார் மனோ கணேசன்.