பல்கலைச் சமூகம் மீதான கொலை அச்சுறுத்தல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் – மாவை

mavai mp inயாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமை சம்பந்தமாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமுமான மாவை சேனாதிராசா கண்டன அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

அதன் முழு விவரமும் வருமாறு:-

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேராசிரியர் மற்றும் மாணவர்களை அச்சுறுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும் மர்மமான முறையில் பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன எனவும் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனவும் செய்திகள் நாளேடுகளில் வெளிவந்துள்ளன.

நேரடியாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதற்கு மேலாக 16ஆம் திகதி முதல் பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கும், விடுதிகளிலிருந்து மாணவர் வெளியேற வேண்டும் எனப் பதிவாளர் பெயரில் அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாகவும் ஆனால் பதிவாளர் விடுமுறையில் இருக்கிறார் எனவும் அவர் அந்த அறிவித்தலை மறுத்துள்ளார் எனறும் கூடத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்ததாக, யாழ். பல்கலைக்கழகத் தரப்பினரை தன்னுடன் சந்திப்புக்கு வருமாறு கோரி, பல்கலைக்கழகத் துணைவேந்தர், பீடாதிபதிகள், மாணவர், தலைவர்களை யாழ். மாவட்ட இராணுவத் தளபதி அழைத்திருக்கிறார் எனவும் இன்னொரு செய்தி வந்திருக்கிறது.

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் யாழ். பல்கலைக்கழகத்தில் மர்மமான சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள், பல்கலைக்கழகத்தை மூடும் பதிவாளர் அறிவித்தல் யாவிலும் இராணுவத்தினரின் சம்பந்தம் இருக்கலாம் என்ற ஐயமே ஏற்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்து சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்களையும் பேராசிரியர்கள், மாணவர்களை அச்சுறுத்தும் கொலைமிரட்டல்களையும் விடுப்பது யார் ? பல்கலைக்கழக வளாகத்தில் இச்செயலைச் செய்வதற்கு யார் இடமளித்தார்கள் ? இவ்வகையில் பல்கலைக்கழகம் மூடப்படுவதையும் இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல்களையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

இச்சம்பவங்கள் தொடர்பாக துணைவேந்தர் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளார். இச்சம்பவங்கள் தொடர்பாக உயர் கல்வி அமைச்சரைத் தொடர்பு கொண்டேன். அவர் அமெரிக்காவிலிருந்து இன்றிரவு தான் இலங்கை வருகிறார் என்று அறிந்தேன். உயர்கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். இவ்விடயத்தை அமைச்சருக்கு தெரியப்படுத்தும்படியும் கேட்டுள்ளேன். பல்கலைக்கழகத்தினுள்ளேயோ, பல்கலைக்கழக நிர்வாகத்திலோ இராணுவம் தலையிடவோ, நுழையவோ இடமளிக்கக் கூடாது. அப்படி ஏதும் அசம்பாவிதம் நேரும் எதுக்கள் இருப்பின் பல்கலைக்கழக நிர்வாகம் – துணைவேந்தர் – உயர்கல்வி அமைச்சுக்கு அறிவிக்கவேண்டும். இறுதியாகத் தேவைப்படின் பொலிஸ் உதவியை நாடலாமே தவிர எக்காரணம் கொண்டும் இராணுவம் தலையிட இடமளிக்கக் கூடாது என யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தரையும், உயர்கல்வி அமைச்சரையும் கேட்டுக் கொள்கின்றேன்.

இராணுவம் கல்வி நிறுவனங்களில் நுழைய அனுமதிக்க வேண்டாம். இத்தகைய இராணுவத் தலையீடுகள் மீண்டும் பயங்கரவாதத்தை துண்டுவனவாக அமையும். மாணவர்களையும் கல்விச்சமூகத்தையும் கொலை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி, அவர்களை அடிமைகளாக வைத்திருக்கவே அரசும், இராணுவமும் முயற்சிக்கின்றன என்றே கருத இடமுண்டு.

யாழ். மக்களின் கல்வியைச் சீரழிக்கும் சதித்திட்டமே இத்தகைய நடவடிக்கை எனச் சுட்டிக்காட்டி அதனைக் கண்டிகின்றோம். சுதந்திரமான சூழல் கல்விப் பீடங்களில் இருக்க வேண்டும் என்பதையும் வற்புறுத்துகின்றோம்.

என்று தனது கண்டன அறிக்கையில் மாவை சேனாதிராசா அவர்கள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஷ்டிக்க முடியாது – உதய பெரேரா

யாழ். பல்கலைக் கல்விச் சமூகத்தை எச்சரித்து வெளியாகிய துண்டுப்பிரசுரத்தினால் பீதி!

யாழ். பல்கலைக்கழகத்துக்கு திடீர் விடுமுறை!

Related Posts