பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பு ஆரம்பமாகியது

சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த கல்விசார் ஊழியர்கள் இன்று முதல் தொடர்ச்சியான பணிப்பகிஸ்கரிப்பினை ஆரம்பித்துள்ளனர்.அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களது இப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக யாழ்.பல்கலைக் கழக ஊழியர்களும் தொடர்ச்சியான இப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.இங்கு கருத்துத் தெரிவித்த யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ. இராசகுமாரன் தெரிவிக்கையில்,

இன்றைய பணிப்புறக்கணிப்புப் போராட்டமானது அனைத்து பல்கலைக்கழகத்திலும் இடம்பெறுகின்ற போராட்டத்தில் ஒரு அங்கமாகும்.

பல கோரிக்கையினை முன்வைத்து கடந்த வருடமும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டோம். ஆனால் அதனை நிறை வேற்றுவதாக அரசு கூறியதன் காரணத்தினால் எமது பகிஷ்கரிப்பை தற்காலிகமாக நிறுத்தியிருந்தோம். ஆனால் அவை இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. எமது கோரிக்கைகள் நிறைவேறவில்லை என்பதால் வேறு வழியின்றி தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளோம்.

சம்பளம் அதிகரிக்கப்படுவதுடன் இலங்கையில் உயர் கல்வி பாதுகாக்கப்பட வேண்டும்.இதற்கு வழங்கப்படும் நிதியானது அதிகரிக்கப்பட வேண்டும்.

அடுத்து பல்கலைக்கழக கல்வி தனியார் மயப்படுத்தப்பட்டு வருகின்றது. கல்வி சார் ஊழியர்கள் இன்றி தனியார் மயப்படுத்தப்படுமாயின் எமது உயர்கல்வி மிகவும் ஒரு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும்.

அத்துடன் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்கள் அரசியல் மயமாக்கப்பட்டு வருகின்றது. அவற்றை உடனடியாக நிறுத்த வேண்டும்.மேலும் எமது கோரிக்கைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டும் வன்முறை மூலமும் பயமுறுத்தல் மூலமும் அவை நிராகரிக்கப்படுகின்ற கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

ஏனெனில் தொழிற் சங்கத் தலைவர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். அதனையும் உடனடியான நிறுத்த வேண்டும். தொழிற் சங்க தலைவர்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பது தவறானது. அவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு அடிபணியவும் மாட்டோம்.எமது கோரிக்கைகள் சரியான முறையில் தீர்க்கப்படவில்லை ஆயின் தொடர்ந்தும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பல்கலை.கல்விசாரா ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தம்

நாடளாவிய ரீதியில் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்ட காலத்தில் வழங்க மறுக்கப்பட்ட சம்பளத்தினை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றைய தினம் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது பகிஷ்கரிப்பினை நிறைவிற்குக் கொண்டு வந்த பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தமது சம்பளத்தில் எதுவிதமாற்றமும் இன்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் 2 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.

பணிப்புறக்கணிப்பு காலங்களிற்கான சம்பளத்தினை வழங்க முடியாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. அதனடிப்படையில் சம்பளத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. சில பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மாற்றம் ஏற்பாடாது சம்பளம் வழங்கபட்டிருந்தது.

இதனால் அனைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கும் ஒரே முறையில் சம்பளத்தை வழங்குமாறு வலியுத்தி நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுத்தனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்கலைக்கழக வாயிலுக்கு வெளியே நின்று ஏமாற்றாதே ஏமாற்றாதே ஊழியரை ஏமாற்றாதே, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே உடன்பாட்டை நிறைவேற்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே வெட்டாதே வெட்டாதே சம்பளத்தை வெட்டாதே போன்ற சுலோகங்களைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களது இக் கோரிக்கையானது நிறைவேற்றப்படாது விடில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படும் எனவும் யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத்தலைவர் தங்கராஜா தெரிவித்தார்.

Related Posts