பல்கலைக்கழக மாணவர்கள் கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதான கொலைக் குற்றச்சாட்டுப் பத்திரத்தில் 42 சாட்சிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 20 பேர் நேற்று (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிய போதும் சுருக்கமுறையற்ற விசாரணை வரும் நவம்பர் மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

சம்பவம் நடைபெற்ற மறுநாள் முற்பகல், யாழ்ப்பாணம் பொலிஸார் விபத்து என்ற அடிப்படையில் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

மாணவர்களின் சடலங்கள் நள்ளிரவே பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டன. அதனால் சம்பவ இடத்தில் விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்துப் பொலிஸார், விபத்துச் சம்பவம் என்ற வகையிலேயே நீதவானுக்கு முதல் அறிக்கை முன்வைத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்று விசாரணையும் ஆராய்ந்து வழக்கை துப்பாக்கிச் சூட்டில் கொலை என்றே முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு சுருக்கமுறையற்ற விசாரணைக்காக நேற்று (02) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

குற்றச்சாட்டுப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 42 சாட்சிகளும் மன்றினால் அழைக்கப்பட்டிருந்த போதிலும் 20 சாட்சிகள் மட்டுமே மன்றில் முன்னிலையாகினர்.

பதில் நீதிவான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, பிரதான நீதிவான் முன்னிலையில் வழக்கு சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வரும் நவம்பர் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

அன்றைய தினம் மன்றினால் அழைக்கப்பட்ட 42 சாட்சிகளையும் முன்னிலையாகுமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

Related Posts