பல்கலைக்கழக மாணவர்கள் கைது! நீதிமன்றத்தை நாட கூட்டமைப்பு முடிவு! நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு

புனர்வாழ்வு என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அண்மையில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தம்மைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கே புனர்வாழ்வு அளிக்க முடியும். ஆனால் உலகத்தில் எங்குமில்லாத நடைமுறை இலங்கையில் பின்பற்றப்பட்டு பல்கலைக்கழக மாணவர்களும் யுத்தத்தினால் பாதிப்படைந்தவர்களும் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்க அனுப்பப்படுகின்றனர்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு எந்தவொரு சட்டத்திலும் இடமில்லை. ஆனால் அவர்களை வெலிக்கந்தை வரை கொண்டுசென்று தடுத்து வைத்துள்ளனர். இவர்களுக்கு புனர்வாழ்வளித்த பின்னரே விடுதலை செய்வோம் என படைத்தரப்பினர் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் வன்னியில் இறுதி யுத்தத்தில் அகப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டவர்களையுத் தற்போது இராணுவத்தினர் கைது செய்து புனர்வாழ்வு என்ற போர்வையில் தடுத்து வைத்துள்ளனர். இக்கைதுகளுக்கும் தடுத்து வைத்தல்களுக்கும் சட்டத்தில் இடமில்லை.

இவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எமது சிரேஷ்ட சட்டத்தரணிகளின் ஊடாகத் தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளோம்.

அதேபோல் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் கணினி பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு வேலைவாய்ப்புகள் வழங்குவதாக ஆசைகாட்டி இராணுவத்தில் இணைக்கப்பட்டு கட்டாயப்படுத்தி பயிற்சிகள் வழங்கப்பட்டுவரும் இளைஞர், யுவதிகளின் உரிமைகளுக்காகவும் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்ய எமது கட்சி தயாராகவுள்ளது.

எந்தவொரு நபரையும் அவரது விருப்பத்திற்கு மாறாக பணிகளில் அமர்த்த முடியாது. இவ்வாறு கட்டாயப்படுத்தி இராணுவத்தில் இணைக்கப்படும் இளைஞர், யுவதிகளின் நிலை தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்பாகவும் இராணுவத்தில் இணைக்கப்பட்டு விடுதலைபெற விரும்பும் இளைஞர், யுவதிகள் தொடர்பாகவும் அவர்களுடைய உறவுகள் எம்முடன் தொடர்பு கொண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்ய ஏற்ற ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு எமது கட்சி சார்பில் கோரி நிற்கின்றேன் என்றார்.

Related Posts