பல்கலைக்கழக மாணவர்களுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

பல்கலைக்கழக மாணவர்களது கோரிக்கைக்கு மதிப்பளித்து முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வை, அவர்களுடன் இணைந்து நடாத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தீர்மானித்துள்ளன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் பல்கலைக்கழக மாணவர்களால் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறவுள்ள நிலையில், அது தொடர்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அவ்வறிக்கையில், “தமிழ் மக்களின் உரிமைக்காக நடாத்தப்பட்ட ஆயுதமேந்திய போராட்டமானது, முடிவுக்கு கொண்டுவரப்பட்ட மே 18ஆம் தினத்திலே ஓரிடத்தில் நினைவு கூருவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்துத் தரப்புக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் முக்கியத்துவமானது, போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்கு கொண்டுசெல்லப்படல் வேண்டும். அல்லது விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றின் மூலம் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைக்காக வலுப்படுத்த வேண்டும் என்பதாகும்.

எனவே முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு வேண்டிக் கொள்வதுடன், நேரில் செல்ல முடியாதவர்கள் இறுதி யுத்தத்தில் இறந்த எம் உறவுகளின் ஆத்மசாந்திக்காக பிராத்திக்குமாறும் வேண்டுகின்றோம்” எனத் தெரிவித்தார்.

Related Posts