பல்கலைக்கழகத்தில் கற்கும் வாய்ப்பை ஒரு சில புள்ளிகளால் தவறவிட்ட மாணவர்களுக்கு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் உயர்கல்வியை தொடர்வதற்காக, 8 இலட்சம் ரூபா வரை கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத் திட்டத்தில் 15 ஆயிரம் மாணவர்களை உள்ளீர்த்துக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து ஆற்றிய உரையிலேயே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நிதியாண்டுக்கான பாதீட்டில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலை அபிவிருத்தி மற்றும் கல்விச் செயற்பாடுகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக உயர்தரம் கற்க தெரிவாகும் 175 ஆயிரம் மாணவர்களுக்கும், நாடளாவிய ரீதியில் 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் டெப் கணனியை பெற்றுக்கொள்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், கேகாலை மற்றும் பதுளை ஆகிய பெருந்தோட்ட பிரதேச பாடசாலைகளுக்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, விசேட தேவையுடைய மாணவர்களின் கல்விக்காக 175 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு, சகல மாணவர்களுக்கும் 2 இலட்சம் ரூபா பெறுமதியான சேமிப்புக் காப்புறுதி வழங்கப்படவுள்ளதோடு, பல்கலைக்கழக மாணவர்களின் புற செயற்பாடுகளுக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை பல்கலைக்கழகங்களில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு உயர்கல்வியை கற்பதற்கு புலமைப்பரிசில் வழங்கவுள்ளதோடு, இதற்கென 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மற்றும் வகுப்பறைகளின் தரத்தை உயர்த்துவதற்கும் நிதியொதுக்கப்பட்டுள்ளது.