“வருடாந்தம், பல்கலைக்கழக தகுதி பெறும் 2,500 மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்படுவதில்லை” என்று, கோப் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனநெத்தி தெரிவித்துள்ளார்.
அனைத்து பல்கலைக்கழகங்களினதும் செயற்பாட்டு தொடர்பாக விசாரணை செய்த போதே, இது தொடர்பாக தெரியவந்ததாக, அவர் தெரிவித்தார்.
“பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், இரண்டாவது முறை மற்றுமொரு தெரிவு நடைபெறும். ஆனால், அதன் பின்னரும் இந்த மாணவர்கள் உள்ளீர்க்கப்படுவதில்லை” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் நிதிக்காக, பேராதெனிய பல்கலைக்கழகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 1.37 பில்லியன் ரூபாய், நிலையான வைப்பொன்றில் செலவு செய்யப்படாமல் அப்படியே இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.
புலமைப்பரிசிலுக்கான நிபந்தனைகள் விதிக்கப்பட்ட மாணவர்களை தெரிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே, குறித்தத் தொகை பணம் செலவழியாமல் அப்படியே உள்ளதாக, பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.