புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு வெளியிடப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவர்கள் இணையத்தளம் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழக அனுமதி பெற தகுதியுடைய மாணவர்களுக்கான அனுமதி கையேடு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. குறித்த கையேட்டை மாணவர்கள் நன்கு ஆராய்ந்து பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்கமுடியும்.
இம்முறை நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு 24,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களை இணைக்க எதிர்பார்த்துள்ளோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.