பல்கலைக்கழகத்திற்கு திடீர் மூடுவிழா; விடுதியை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி விடுதிகளில் உள்ள மாணவர்களையும் இன்று மாலைக்குள் வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினத்தினை நாளைய தினம் பல்கலைக்கழகத்திலே அல்லது விடுதிகளிலே மாணவர்கள் கொண்டாடலாம் என்ற அச்சத்திலே இந்த திடீர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை நேற்று இரவு முதல் யாழ்.பல்கலைக்கழக சூழலினை சுற்றி இராணுவத்தினர் கவச வாகனங்களுடன் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒருவாரமாக பல்கலைக்கழக சூழலில் இராணுவத்தினரும், பொலிஸாரும் நிலை கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில்,நேற்று இரவு முதல் அதிகளவு இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டதுடன் இரண்டு கவச வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts