இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட வீதி ஓட்டப் போட்டியில் யாழ்.பல்கலைக்கழக அணி முதல் முறையாகக் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.இலங்கை அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட மரதனோட்டப் போட்டியில் சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் சம்பியனானது.
2014ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகளின் ஒரு கட்டமான வீதியோட்டப் போட்டி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (13) முதற் தடவையாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உடற்கல்விப் பிரிவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வி பிரிவின் தலைவர் எம்.எல்.ஏ.தாஹீரின் நெறிப்படுத்திலின் கீழ் இப்போட்டியினை தென்கிழக்குப் பலக்லைக்கழக பதில் உபவேந்தர் எம்.அப்துல் ஜப்பார் அதிதியாகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இலங்கையின் 11 பல்கலைக்கழகளிலிருந்து 77 போட்டியாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
இப்போட்டியானது அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபர சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இலங்கை தென் கிழக்குப் பல்கலைக்கழக முன்றல் வரை 10 கிலோமீற்றர் தூரம் சென்று நிறைவு பெற்றது.
இப்போட்டியில் முதலாமிடத்தை சிறி ஜயவர்த்தன பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பி.டபிள்யூ.கயான் சன்ஜீவ பெற்றுகொண்டார். முறையே இரண்டாம், மூன்றாமிடங்களை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த என்.கிருபனசாந்தன், எம்.வீ.எஸ்.பிரியங்க ஆகியோர் பெற்றுகொண்டனர்.
பல்கலைக்கழகங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் முதலாவது இடத்தை சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகமும் இரண்டாமிடத்தை பேராதெனிய பலகலைக்கழகமும் மூன்றாமிடத்தை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகமும் பெற்றுக்கொண்டது.
இந்நிகழ்வில் இறுதியில் அதிதிகளினால் வெற்றிபெற்ற முதல் இடத்தைப் பெற்ற 10 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த வருடம் இப்போட்டியினை மொறட்டுவ பல்கலைக்கழகம் நடத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.