பல்கலைகளில் சகல நியமனங்களையும் இடைநிறுத்த உத்தரவு!!!

இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் பணிநிலை வெற்றிடங்களை நிரப்பும் பணிகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான அறிவித்தல் நேற்று மாலை சகல பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சின் திறைசேரிச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அனைத்து ஆள்சேர்ப்புப் பணிகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா இன்று மாலை அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் மூலம் அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்த அறிவித்தலின் மூலம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ உதவியாளர், பாதுகாப்பு உத்தியோகத்தர், ஆய்வு கூட உதவியாளர் பதவிகளுக்கான தெரிவுப் பரீட்சைகளிலும், நேர்முகத் தேர்விலும் தோற்றிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நியமனங்கள் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி உயர் கல்வி அமைச்சின் செயலாளரினால் பெயர் குறித்து அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த ஓகஸ்ட், செப்ரெம்பர் மாதங்களில் நடாத்தியிருந்தது. எனினும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அசண்டையீனம், தொழிற்சங்க போராட்டம் போன்ற காரணங்களினால் நேர்முகப் பரீட்சைகளில் தேறியவர்களுக்கு நியமனங்களை வழங்குவதில் இழுபறி நிலவி வந்தது.

அதன் பின் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நியமனங்களை வழங்குவதற்கான பேரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலமை காரணமாக பல்கலைக்கழகங்களில் அனைத்து வகையான நியமனங்களையும் இடைநிறுத்த வேண்டிய நிலமை ஏற்பட்டுள்ளது. இதனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாத்திரம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் நியமனங்கள் கேள்விக்குறியாகி இருக்கிறது.

Related Posts