யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி மிக விரைவில் திறந்துவிடப்படவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
போர் காலத்தில் வலி, வடக்கில் பெருமளவு நிலப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போர் நிறைவடைந்த பின்னர் அதன் பெரும் பகுதி நிலம் மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காங்கேசன்துறை வீதி, பலாலி வீதி, ஆகிய இரு வீதிகளின் ஒரு பகுதி முற்றாக உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அகப்பட்டிருந்த நிலையில் காங்கேசன்துறை வீதி முற்றாக மக்கள் பயன்பாட்டுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் பலாலி வீதியில் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி தொடர்ந்தும் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியுள்ளது. இதனால் கடந்த சில வருடங்களாக அச்சுவேலிக்கு செல்வதற்கும், தெல்லிப்பழைக்கு செல்வதற்கும் இணைப்பு வீதிகளையே மக்கள் பயன்படுத்தும் நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் மேற்படி வீதியை விடுவிப்பதற்கு, பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் மிக விரைவில் குறித்த வீதி மக்கள் பயன்பாட்டிற்கு விடுவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இம்மாதம் நடுப்பகுதியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ள இந்த வீதி திறப்பு சாத்தியமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்னேற்பாடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையுடனான கலந்துரையாடல் முடிவடைந்ததாக அரதரப்பு அரசியல்வாதிகள் சிலர் கூறியுள்ள நிலையில், ஏனைய செயற்பாடுகள் முழு வீச்சில் இடம்பெற்றுவரும் நிலையில் இம்மாதம் குறித்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறந்து விடப்படக்கூட சாத்தியப்பாடுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.