பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக பலாலி விமானத்தள சுற்றியுள்ள 2 ஆயிரம் ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவ்வாறு பெற்றுக் கொள்ளப்படும் காணிகளுக்கு உரிய மதிப்புத் தொகையை நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார்.
வடக்கில் உண்மைக்கு முரணான பிரசாரங்களை பரப்பி தமிழ் மக்களை குளப்பும் முகமாக அரசியல் கட்சிகள் சில 50 பேருக்கும் குறைவானவர்களை கொண்ட ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. எனினும் இவாறான போராட்டங்களில் தமிழ் மக்கள் யாரும் பங்குகொள்வதில்லை என்பதுடன் கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஒரு சில ஆதரவாளர்கள் மட்டுமே என எனவே இவர்களுடைய போராட்டங்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும் தற்போது இலங்கையின் வட பகுதியில் துரித அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக பலாலி விமான நிலையத்தை சர்வதேச ரீதியில் தரம் உயர்த்துவது மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது என பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளுவதற்கு தேவையான காணிகளை பெற்றுக்கொள்ளுவதற்கு சம்பந்தப்பட்டவர்களை நாம் நாடுவோம் என குறிப்பிட்டார்.
மேலும் வடபகுதியில் மட்டும் தான் அபிவிருத்திக்கு காணிகளை பெற்றுக்கொள்ளும் போது தங்களுடைய அரசியல் இருப்பை காப்பாற்றிக்கொள்ள வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் போலியான பிரசாரங்களை கட்டவிழ்த்து விட்டு பொது மக்களை ஏமாற்றி வருகின்றன என தெரிவித்தார்.
வட பகுதியில் தற்போது அபிவிருத்திக்காக பெற்றுக்கொள்ளும் காணிகளை போன்றே தென்பகுதியில் அமைக்கப்பட்ட அதிவேக வீதி, மத்தள சர்வதேச விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது அப்பிரதேச மக்களின் காணிகள் பெற்றுக்கொள்ளப்பட்டன அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள் எனக்குறிப்பிட்டார்.
மேலும் இராணுவம் ஒரு போதும் வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கவில்லை. தமிழ் கட்சிகளினுடைய குற்றச்சாட்டுகள் அனைத்துமே உள் நோக்கங்களைக் கொண்டவை என்று குறிப்பிட்டார்.