பலாலி விமானநிலையத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களை பதியுமாறு அழைப்பு!

பலாலி விமான நிலையத்திற்காக அரசினால் 1952 மற்றும் 1983 ஆகிய காலப்பகுதிகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்டிருந்த 956 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களையும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராம சேவகர்களிடம் பதியுமாறும் கோரப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் மற்றும் இராணுவ முகாமிற்காக 1952 மற்றும் 1983ம் ஆண்டுகளில் அரசினால் சுவீகரிக்கப்பட்ட நிலங்களிற்கான நட்ட ஈடு இன்றுவரை அரசினால் வழங்கப்படவில்லை. எனவே இவர்களிற்கான நட்ட ஈட்டினை வழங்கும் நோக்கில் இக் காணிகளின் உரிமையாளர்களைஇனம்காணும் நடவடிக்கையாகவே மேற்படி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காகவே பிரதேச செயலகம் ஊடாக மேற்படி விபரம் திரட்டப்படுகின்றது. பலாலி விமானத்தளம் அமைப்பதற்காக இரண்டாம் உலக மகா யுத்தகாலத்தில் 1952ம் ஆண்டிலேயே இப் பகுதியில் நிலம் சுவீகரிக்கும் படலம் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து இலங்கை விமானப்படை மற்றும் இராணுவமும் நிலை கொண்டனர். இந்தக் காலப்பகுதியில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 83ம் ஆண்டில் இரண்டாம் கட்டமாகவும் நிலம் சுவீகரிக்கப்பட்டது.

இரு நடவடிக்கைகளிலும் அரசினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளாக மொத்தம் 956 ஏக்கர் நிலம் காணப்பட்டது. இந்த நிலப்பகுதிகளே பலாலி கூட்டுப்படைத் தளத்தின் நிரந்தர நிலமாகவும் காணப்பட்டது. இந்த நிலப்பரப்புக்களிற்குள் விமான ஓடுபாதை , கட்டுப்பாட்டு அறைகள் , கட்டுப்பாட்டுக் கோபுரங்கள் , காவல் நிலையங்களும் நிரந்தர இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும் இந்நிலங்கள் சுவீகரிக்கப்படும் போது அதற்கான நட்ட ஈடுகள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டனவே அன்றி இன்றுவரை நட்ட ஈடு வழங்கப்படவில்லை.

இதனால் அக் காணி உரிமையாளர்களை இனம் கண்டு அவர்களை சொந்த நிலத்திற்கும் அழைத்துச் சென்று காண்பித்து அவர்களிற்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவை வழங்குவதே இதன் நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் 1952ம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களின் 3வது தலைமுறையினரே தற்போது வாழ்வதனால் இவர்களினால் தமது சொந்த நிலத்தினை அடையாளம் காணமுடியுமா என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.

இதேநேரம் 1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக அபகரித்த நிலங்களுடன் பலாலி விமான நிலையத்துடன் இணைத்து தற்போதும் வலி. வடக்கு பிரதேசத்தில் 4 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் தற்போதும் படையினர் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ள தமது குடியிருப்பு நிலத்தினை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு அதன் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts