பலாலி கப்பல் துறைமுக நிர்மாணப்பணிகள் மிகவிரைவில்

யாழ் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள (பலாலி) கப்பல்த்துறை முகத்தினை நிர்மாணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசணை தேவையாக உள்ளதாகவும் அதனுடாக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மிகவிரைவில் எடுக்கப்படும் எனவும் கப்பல், துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

வடக்கில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக எமக்கான கொள்கைத் திட்டங்களை அரசாங்கம் வழங்கியிருக்கின்றன. அவற்றை இன்றை தினம் கலந்துரையாடுவதன் நோக்கில் தாம் இங்கு வருகைதந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

துறைமுகங்களை அபிவிருத்தி செய்து நாட்டினை வளமிக்கதாக மாற்றுவதே எமது நிலைப்பாடு அதனை முன்னெடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கின் துறைமுகங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் யாழ் மாவட்டத்தின் தீவகத்தின் துறைமுக அபிவிருத்திகளை முன்னெடுக்கும் வகையிலான ஆரம்பகட்டத்தின் உயர் மட்ட கலந்துரையாடல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தின் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்கு கப்பல், துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது யாழ் மாவட்டத்தின் காரைநகர், நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு காணப்படுகின்ற கப்பற் துறைமுகங்கள் மற்றும் சிறிய ரக இறங்கு துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

இதில் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஏ.பள்ளியக்கார, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் மற்றும் கப்பல் துறைமுக உயர் அதிகாரிகள், கடற்படையினர், பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts