பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திலமைந்துள்ள 1500 ஏக்கர் காணிணை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய, பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி நேற்று (சனிக்கிழமை) அப்பிரதேசங்களுக்குப் பயணம் செய்து குறித்த பகுதிகளைப் பார்வையிட்டார். அத்துடன் மீள் குடியேற்றத்திற்காக காங்கேசன்துறை சீமெந்துக் கூட்டுத்தாபனத்துக்கருகில் இராணுவத்தினரால் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் வீடுகளையும் பார்வையிட்டுள்ளார்.
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் சுமார் 6500 ஏக்கர் நிலம் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலையில் இதுவரை 1953 ஏக்கரே மக்களின் பாவனைக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
பலாலி பாதுகாப்பு வலயத்துக்குள்ளிருக்கும் காணிகளை ஜூன் மாதத்துக்குள் விடுவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில் இதுவரை விடுவிக்கப்படாததால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையிலேயே இவ் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.