பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் இந்த வருடத்துடன் நிறுத்தப்படுகின்றது!

closedஆசிரியர்களின் தொழில்சார் கல்விக்கும் வாண்மை விருத்திக்கும் தனித்துவமான முறையில் கடந்த 55 வருடங்களாகச் செயற்பட்டு வந்த பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் இந்த வருடத்துடன் நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் வருடங்களில் பயிற்சியளிப்பதற்காக ஆசிரியர்கள் எவரையும் இக் கலாசாலைக்கு இணைத்துக்கொள்ளப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களுக்கு விசேட பாடத்துறைகளில் பயிற்சி அளிப்பதற்கென அமைக்கப்பட்டிருந்த பலாலி ஆசிரியர் கலாசாலை, இலங்கையில் விசேட ஆசிரியர் கலாசாலைகளாக தனித்துவமான விளங்கிய இரண்டு ஆசிரியர் கலாசாலைகளில் ஒன்றாக விளங்கியது. மகரகம ஆசிரியர் கலாசலைக்கு நிகராக இக் கலாசாலையும் தனித்துவமாக செயற்பட்டு வந்தது.

இக் கலாசாலை பலாலி விமான நிலையத்திற்கு அருகில் வசாவிளான் சந்தியில் இருந்து தெல்லிப்பழை நோக்கிச் செல்லும் வீதிக்கு வடக்குப் புறமாக உள்ள 52 ஏக்கர் நிலப்பரப்பில் ஆசிரியர் பயிற்சிக்கான சகல வள வசதிகளுடனும் செயற்பட்டு வந்தது. இக் கலாசாலைக்கென ஒதுக்கப்பட்டிருந்த 52 ஏக்கர் காணி மற்றும் கட்டடங்களை பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளது.

இங்கு ஆங்கிலம், விஞ்ஞானம், விவசாயம், தொழில்நுட்பத்துறை பாடங்கள், வர்த்தகம், கணிதம் ஆகிய உள்ளிட்ட விசேட துறைப் பாடங்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன.

இக் கலாசாலையில் பயிற்சிபெற்ற ஆசிரியர்களுக்கு விசேட பயிற்சி என்ற நிலையில் 1976ஆம் ஆண்டு வரை வேறுபடுத்தப்பட்ட விசேட பயிற்சி ஆசிரியர் சம்பளத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இந் நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள ஒன்பது ஆசிரியர் கலாசாலைகளில் இந்த வருடம் பலாலி ஆசிரியர் கலாசாலை தவிர எட்டு ஆசிரியர் கலாசாலைகளுக்கே பயிற்சிகளுக்கு ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்த வருடத்துடன் பலாலி ஆசிரியர் கலாசாலையின் செயற்பாடுகள் முற்றாக நிறுத்தப்படவுள்ளன.

பலாலி ஆசிரியர் கலாசாலை 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களில் செயற்பட்டு போதிலும் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக திருநெல்வேலியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான கட்டடத்தில் செயற்பட்டு வருகின்றது.

தற்பொழுது ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் மட்டுமே இங்கு வழங்கப்படுகின்றன. 50 பயிற்சி ஆசிரியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி இந்த வருடத்துடன் நிறைவு பெறவுள்ளது.

பலாலி ஆசிரியர் கலாசாலையின் தளபாடங்கள், நூல்நிலையப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வேறு நிறுவனங்களுக்கு கல்வி அமைச்சினால் கையளிக்கப்பட்டுள்ளது.

பலாலி ஆசிரியர்கலாசாலையின் கற்றல் செயற்பாடுகள் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையுடன் இணைக்கப்பட்டு அக் கலாசாலையின் அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

55 வருடங்களுக்கு மேலாக ஆசிரியர் தொழில்சார் கல்வி மேம்பாட்டிற்கும் வாண்மை விருத்திக்கும் தனித்துவமான முறையில் பயிற்சிகளை வழங்கிய பலாலி ஆசிரியர் கலாசாலையை மூடுவதற்கு ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வியியலாளர்கள் எதிராக குரல் எழுப்பி வந்திருந்த போதிலும் எதிர்ப்புக்கள் நீண்டகாலமாக நின்று நிலைக்கவில்லை. கல்வி அமைச்சு பலாலி கலாசாலையை மூடவுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் பலாலி, திருநெல்வேலி, நல்லூர், கொழும்புத்துறை, சாவகச்சேரி, கோப்பாய் ஆகிய பிரதேசங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியர் கலாசாலைகள் செயற்பட்டுவந்தபோதிலும் அவை காலத்துக்குக் காலம் மூடப்பட்டு 1985ஆம் ஆண்டிற்குப் பின்னர் பலாலி, கோப்பாய் ஆசிரியர் கலாசாலைகள் மட்டுமே செயற்பட்டு வந்தன.

பலாலியும் இந்த வருடத்துடன் மூடப்படுவது தமிழ் ஆசிரியர்களின் தொழில்சார் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் என கல்வியியலாளர்கள் கவலை தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts