பலாலியில் 137 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி

மீளக்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பலாலி வடக்கில் 137 வீடுகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெல்லிப்பழை பிரதேசச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீள்குடியேற்ற அமைச்சின் 8 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அன்ரனிபுரம் பகுதியில் 30 வீடுகளின் பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல் காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணியில் கட்டப்பட்ட 107 வீடுகளின் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து எதிர்வரும் 4 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகைதரும் ஜனாதிபதி, பயனாளிகளிடம் கையளிக்கவுள்ளார்.

1990 ஆம் ஆண்டு உள்நாட்டு இடப்பெயர்வின் போது இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள் பருத்தித்துறை, திக்கம் பகுதிகளில் வாடகை வீடுகளிலும் அகதி முகாம்களிலும் வாழ்ந்து வந்திருந்தனர். நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து மக்களுடைய காணிகள் மீண்டும் பொதுமக்களிடம் படிப்படியாக ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி பலாலி வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தது. தற்போது 1 வருடம் பூர்த்தியாகியுள்ள இத் தருணத்தில் மக்களுக்கான நிரந்தர வீடுகள் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts