தம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.தம்மைச் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் பலாலியில் இருந்து இடம்பெயர்ந்து வசிக்கும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமது மீளக்குடியமர்வு தொடர்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவைச் சந்தித்துப் பேசிய போதே அவர்கள் இந்த எச்சரிக்கையை விடுத்தனர்.
பலாலியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் சுமார் 30 வருடங்களாக நலன்புரி நிலையங்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றனர். இடம்பெயர்ந்து நீண்ட காலம் கடந்துள்ளபோதும் இவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எவையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
வலி.வடக்கில் தற்போது பல பகுதிகளிலும் மக்கள் மீளக்குடியமர்வதற்கு இராணுவம் அனுமதித்துள்ளது. எனினும் பலாலிப் பகுதி மக்களின் மீளக்குடியமர்வு தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் இல்லை.
இடம் பெயர்ந்து நீண்டகாலமாகத் தாம் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருவதாக அந்த மக்கள் கூறுகின்றனர். எனினும் எமது விடயத்தில் அரசு சற்றேனும் அக்கறை கொள்ளவில்லை என அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பலாலியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள இந்த மக்களில் ஒரு பகுதியினரை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது அங்கு வந்திருந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட பலாலி மக்கள் தம்மை உடனடியாகச் சொந்த இடத்தில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த விடயத்தில் உடனடியாகக் கவனம் செலுத்தப்படாவிட்டால் தாம் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா உயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களைக் குடியமர்த்தக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
அதன் தீர்ப்பு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் என்ன நடவடிக்கை மேற்கொள்வது என முடிவு செய்யலாம் என்றார்.