பலம் இன்றேல் அதிகாரங்களைப் பெற முடியாது. எம்மை நாம் பலப்படுத்திக்கொள்ள எமக்கென அதிகாரங்களைப் பெற வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரத்துக்கு ஒரு கேள்வி என்ற அடிப்படையில், இந்த வாரம் ’70 வருட அரசியல் போராட்டத்தில் தமிழ் மக்கள் கண்ட பலன் என்ன?’ என்ற கேள்விக்கு, முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் பதிலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும், எமது போராட்டத்திற்குக் காரணம் பெரும்பான்மையினர் எம்மை உதாசீனம் செய்தமையும் எமக்கெதிராக சட்டங்கள் கொண்டுவந்தமையுமே. அரசியல் அதிகாரங்களை முழுமையாக அவர்கள் தம்கைவசம் வைத்திருந்து வந்ததாலேயே தமிழ் மக்களின் போராட்டங்கள் பலிக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் என்றென்றும் இந்த நிலைதான்.
அரசியல் ரீதியான முன்னேற்றம் காணாமல் பொருளாதார முன்னேற்றம் காண்பது எமக்கெல்லாம் நன்மையைத் தரும் என்று கூறமுடியாது.
எம்மை நாம் பலப்படுத்திக்கொள்ள எமக்கென அதிகாரங்களைப் பெற வேண்டும். ஆனால் அதற்கு நாங்கள் பலமாக இருக்க வேண்டும். பலம் இல்லாது போனால் பெரும்பான்மையினர் தமது அதிகாரங்களைப் பகிர மாட்டார்கள்.
மலைநாட்டுத் தமிழ் மக்களின் தலைவர் சௌம்யமூர்த்தி தொண்டைமான் அவர்கள் தொழிற்சங்கப் பலத்தைக் கொண்டு தாம் இழந்த பல அதிகாரங்களை மீளப் பெற்றார். தம்பி பிரபாகரன் வன்முறையை நாடி ஈற்றில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றோம். ஆகவே அதிகாரங்களைத் திரும்பிப் பெற எமக்குப் பலம் அவசியம்.
பலம் இன்றேல் அதிகாரங்களைப் பெற முடியாது. அதிகாரம் இல்லையென்றால் நாம் பலமற்றவர்கள் ஆவோம். இது ஒரு கொடிய வட்டமாகும் – எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.