பற்றீசியன், யூனியன்ஸ் அணிகள் அரையிறுதியில்

JPL-logoயாழ்ப்பாணம் பிறிமியர் லீக் டுவென்டி – 20 துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு தெல்லிப்பளை யூனியன்ஸ் அணியும் பற்றீசியன்ஸ் அணியும் உள்நுழைந்துள்ளன.

யுவ பிரண்ட் பவுண்டேஸன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிறிமியர் லீக் துடுப்பாட்டச் சுற்றுப்போட்டிகள் மே மாதம் 10 ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 18 துடுப்பாட்ட அணிகள் பங்குபற்றிய மேற்படி துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின் முதற்சுற்றுப்போட்டிகள் லீக் முறையில் இடம்பெற்று, காலிறுதிப் போட்டிகளுக்கு கொக்குவில் மத்திய சனசமூக நிலையம், தெல்லிப்பளை யூனியன்ஸ், பற்றீசியன்ஸ், ஜொனியன்ஸ், சென்ரல், சென்றலைட்ஸ், கிறாஸ்கோப்பர்ஸ், ஸ்கந்தா ஸ்ரார்ஸ் ஆகிய 8 அணிகள் தெரிவாகின.

தொடர்ந்து காலிறுதி ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்கள் திங்கட்கிழமை (16) இடம்பெற்றன.

முதலாவது அரையிறுதியாட்டத்தில் பற்றீசியன் விளையாட்டுக்கழக அணியினை எதிர்த்து கிறாஸ்கோப்பர்ஸ் அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற கிறாஸ்கோப்பர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. கிறாஸ்கோப்பர்ஸ் அணி 19.5 பந்துபரிமாற்றங்களில் 105 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் என்.காந்தசீலன் 38 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பற்றீசியன் அணி சார்பாக எஸ்.சுஜீவன் 4 பந்துபரிமாற்றங்கள் பந்துவீசி 16 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 இலக்குகளைக் கைப்பற்றினார்.

106 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பற்றீசியன் அணி, அடுத்தடுத்து இலக்குளை இழந்து தடுமாற்றத்தினைச் சந்தித்து வந்தது. எனினும் இறுதி நேரத் துடுப்பாட்ட வீரர்களின் சாதுரியமான ஆட்டத்தினால் 19.3 பந்துபரிமாற்றங்களில் 9 இலக்குகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் 9 ஆவது துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய நோபேர்ட் 18 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கிறாஸ்கோப்பர்ஸ் அணி சார்பாக எம்.மதுசன் 3, என்.ராஜகாந்த் 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

இந்தப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக பற்றீசியன் அணியின் எஸ்.சுஜீவன் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது காலிறுதியாட்டத்தில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியினை எதிர்த்து சென்ரல் விளையாட்டுக்கழகம் மோதியது.

நாணயச் சுழற்சியில் வென்ற சென்ரல் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. அதற்கிணங்கக் களமிறங்கிய தெல்லிப்பளை யூனியன் அணி 19.1 பந்துபரிமாற்றங்களில் 157 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எஸ்.தயாளன் 34 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சென்ரல் அணி சார்பாக, வி.ரஜீவ்குமார் 4, எம்.றொகான், எஸ்.சுபதீஸ் தலா 2 இலக்குகளையும் கைப்பற்றினார்கள்.

158 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றியென்ற இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென்ரல் அணி, 20 பந்துபரிமாற்றங்களில் 8 இலக்குகளை இழந்து 145 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் எம்.றொகான் 26, பி.பாலேந்திரா 24, வி.றஜீவ்குமார் 20, எஸ்.சலீஸ்ரன் 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் யூனியன் அணி சார்பாக ஆர்.இரகுபதி, எஸ்.தயாளன் தலா 3 இலக்குகளை வீழ்த்தினார்கள்.
இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக யூனியன் அணியின் எஸ்.தயாளன் தெரிவு செய்யப்பட்டார்.

Related Posts