யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவருக்கு வழங்க என 180 மில்லிக் கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பற்பசைக்குள் மறைத்து சூட்சுமமாகக் கடத்திச் சென்ற இளம் பெண் மற்றும் இளைஞர் ஒருவரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் சிக்கிக்கொண்டனர்.
இந்தச் சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸார் ஊடாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் உத்தரவிட்டார்.
கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவரை பார்வையிட வருகை தந்துள்ளார். அவர் கொண்டு சென்ற பாசலை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சோதனையிட்டனர்.
பாசலிருந்த பற்பசையைச் சோதையிட்ட போது, அதற்குள் 4 பக்கற்றுக்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றுகுள் ஹெரோயின் போதைப்பொருள் உள்ளமையை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கண்டறிந்தனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. சிறைசாலைக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளின் பின்னர், இளம் பெண்ணையும் அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரையும் கைது செய்தனர்.
பெண்ணிடம் மீட்கப்பட்ட 4 பக்கற்றுக்கள் ஹெரோயினின் எடை 180 மில்லிக்கிராம் என மதிப்பிடப்பட்டது.
கஞ்சாவுடன் பெண் கைது
இதேவேளை, யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உடமையில் 10 கிராம் கஞ்சா போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை வரும் 20ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.